Monday, March 15, 2021

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 11
கர்நாடக மெட்டுகள் நிறைந்திருந்த காலகட்டம் அது. அங்கொன்றும் இங்கொன்றும் நாட்டுப்புற மெட்டுக்களோ இல்லை மேல் நாட்டு இசை என சொல்லப்படும் WESTERN music ஒலித்த காலம் அப்படியே ஒலித்தாலும் ஒன்று நகைச்சுவை பாடலிலோ இல்லை நடன மங்கையோ இல்லை vamp பாத்திரங்கள் ஆடும்படி இருக்கும். நாயக நாயகியர் காதல் எல்லாம் பொதுவாக நல்ல கர்நாடக மெட்டிலோ, இல்லை பாரம்பரிய கருவிகளோ பயன்படுத்தி பாடல்கள் இருக்கும் அந்த காலகட்டத்தில் இன்று உள்ளது போல் உலகமே கையில் இல்லை. மேல் நாட்டு இசையைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகம், ஆங்கில பத்திரிக்கைகள், இசை சம்பந்தப்பட்ட நூல்கள் என்று தேடி தேடி படித்து அறிவையும் இசையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் .. அறிந்து கொள்ள வேண்டும் .. அப்படிப்பட்ட சூழலில் மெல்லிசை மன்னர்கள் தாங்கள் நுழைந்த புதிதில் அந்நியப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில மெட்டுக்களை அன்றைய நிலைப்படி கர் நாடக பாணியில் போட்டாலும் தங்களுக்கென்று தனி பாணியை, தனி அடையாளத்தை உருவாக்கி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பல வித்தியாசமான ஒலியமைப்புகள், மேற்கத்திய இசைக்கருவிகளின் பயன்பாடு/மேலை நாட்டின் இசை பாணியை புகுத்தி பல ஜாலங்களை தெளித்து கேட்பவர்களுக்கு அட இது புதுசா இருக்கே .. இது கேட்டிராத ஒலியாக இருக்கே என்ற பிரமிப்பை உண்டாக்கினர் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி . அவரது பியானோ மோகம் பற்றி நாம் சொல்வதை விட கவியரசர் சொன்னதே நம் நினைவுக்கு வரும். ரஷ்ய பயணத்தில் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் பியானோவில் கை வைத்தவுடன் எதையும் பார்க்காமல் இவர் வாசித்ததை பார்த்து அங்கு கூடியிருந்தவர்களே வியந்தார்களாம். இயக்குனர் ஸ்ரீதர் குறிப்பாக என்ன என்ன வார்த்தைகளோ பாடலில் ஸ்ரீகாந்த் பியானோ வாசிப்பதை போல் வரும் காட்சியில் மன்னரின் கையை காண்பித்தார் என்ற செய்தியும் உண்டு. எம்.எஸ்.வி டைம்ஸ் மன்னரின் பியானோ பாடல்களின் தொகுப்பையே வெளியிட்டனர். அப்படி பியானோ அவரை ஆட்கொண்டதில் ஒன்றும் வியப்பில்லை. 1954.. சினிமா பழமை மாறாமல் இருந்த காலகட்டம் .. இருந்தாலும் பல்வேறு ஜாம்பவான்களும் பல்வேறு இசையால் மக்களை மயக்கும் வண்ணம் இருந்தனர் அதிலும் புதியவர்களான மெல்லிசை மன்னர்கள் மெல்ல மெல்ல தங்களின் நடையை ஒரு அடையாளமாக மாற்றிக்கொண்டிருந்தனர். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைய தொடங்கின . அப்படி ஒரு படம் தான் 1954’ல் வெளியான வைரமாலை.. நகைச்சுவை சித்திரமான இந்த படத்தில் இரட்டையர்கள் கொடுத்த மெட்டுக்கள் மக்களை பரவசப்படுத்தியது என்றால் அது மிகையில்லை .. குறிப்பாக இன்றைய எனது தெரிவான “கூவாமல் கூவும் கோகிலம்” பாடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பியானோ பற்றி இவ்வளவு பேசியதும் இந்த பாடல் பற்றி சொல்லத்தான்.. பாடலின் துவக்கமே பியானோவும் பின் புல்லாங்குழலும் சேர்ந்து செய்யும் ஜாலங்களை வார்த்தையில் விவரிக்க முடியாது. கர் நாடக பாடகி எம்.எல்.வி அதே பாணியில் பாடல்கள் பாடியிருந்தாலும் சுதர்சனம் மாஸ்டர், சி.ஆர் சுப்புராமன் போன்றோர்களுக்கு ஜனரஞ்சகமான பாடல்களும் பாடியுள்ளார் இருந்தாலும் காதல் பாட்டில் அதுவும் இப்படி ஒரு மெட்டில் பாடவைத்த பெருமை இரட்டையர்களையே சாரும்.. உடன் பாடுபவர் முதல் பின்னணிப்பாடகரான திருச்சி லோகநாதன் இந்த படத்தில் கனகசுரபி எழுதி இதே ஜோடிக்குரல் பாடிய வஞ்சமிதோ வாஞ்சையிதோ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கும் அழகான இசை ஆனால் இந்த பாடல் காதலர்கள் உல்லாசமாய் பூங்காவில் பாடும் பாடலுக்கு மேற்கத்திய இசையை அழகாய் புகுத்தி அதுவும் பியானோவின் துவக்கம் பின் தொடரும் குயிலோசையை சொல்லும் குழலோசை என முதல் முகவரி இசையே அட என சொல்ல வைக்கும் தொடரும் எம்;எல்.வியின் அந்த ஹம்மிங் ஆஹா என்ன இதம் .. உடன் இணையும் லோகநாதன் குரலில் ஹம்மிங் கவியரசரின் அழகான வரிகள் .. தபலா தவழ தழுவ .. கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம் யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே மேற்கத்திய பாணியை தொட்டுக்காட்டி பின் நம் கருவிகளை அழகாக கோர்த்து கொடுப்பதில் மன்னருக்கு நிகர் மன்னர் தான்.. கவியரசர் அப்பொழுதே மன்னரை கவர்ந்திருப்பார் பின்னே கோகிலம் கோமளம் போன்ற வார்த்தைகளை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பது அழகு. பெங்களூர் லால்பாக் கார்டனில் படமாக்கப்பட்ட பாடல் .. அழகு பத்மினியுடன் நாடக காவலர் மனோகர் அவர்கள் (என்ன அழகு மிடுக்கு) பல்லவி ஒரு வகை என்றால் தொடரும் சரணம் முற்றிலும் வேறுபட்ட இசை .. எம்.எல்.வியின் குரலில் தொடரும் இப்படி கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை அன்பு தேனோடும் நீரோடை நாமே யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமெ என்னாளும் அழியாது என் ஜீவனே அன்பு தேனோடும் நீரோடை நாமேவில் அந்த நா ......... மே .. அந்த சங்கதி எல்லாம் மன்னர் முத்திரை .. தபலா உருட்டல் தொடரும் பாடல் முழுவதும் அடுத்து லோக நாதன் தொடருவார் இதுவும் வேறு இசை வேறு நடை கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும் பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே வார்த்தைகள் ஏனோ? எம்.ல்.வி பதிலுரைப்பார் அதுவும் வேறு நடையில் வீணையின் நாதம் மேவும் சங்கீதம் நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும் இப்படி ஆங்கிலத்தில் சொல்வது போல் cut & cut அதுபோல் நிறுத்தி நிறுத்தி .. வெட்டி வெட்டி மெட்டுக்களை இணைப்பது . அப்படி இங்கே மெட்டு இணையும் குரல்களும் இணையும் இன்ப வேளை நமது வாழ்வை யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே தங்கள் வீட்டில் இருக்கும் நிலவரம் குறித்து இருவரும் சிரித்து பேசுவதாய் தொடரும் சரணமும் அதன் இசையும் அழகோ . இதுவும் வேறு நடை இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே மணமகள் இங்கே மணமகன் அங்கே நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ? இன்ப வேளை நமது வாழ்வை யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே கூவாமல் கூவும் கோகிலம் கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம் யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே மெல்லிசை மன்னர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய பாடல் இது என்றால் அது மிகையில்லை ..என்ன ஒரு இசை, வரிகள், குரல் எல்லாம் இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் கூட்டுகிறதே அது ஏன்.. அது தான் மெல்லிசை மன்னர் .. 90’களில் தீபன் சக்ரவர்த்தி சில பழைய பாடல்களை டிஜிட்டல் வடிவம் கொடுத்து உலவும் தென்றல் என்ற பெயரில் தன் அப்பாவும், டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்களை மீண்டும் பாடினார் அப்படி அவர் இந்த பாடலை பாடியபோது எம்.எல்.வி பாடியதை இசையரசி பாடினார். அதுவும் இனிமை குளுமை ... இந்த பாடல் அமானுஷ்யத்தில் இடம்பெற காரணம் அந்த மேற்கத்திய இசை பாணியை தைரியமாக காதல் பாடலில் புகுத்தி புதுமை செய்தததால் .... அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா

No comments:

Post a Comment