Monday, March 15, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 5
உலகிலேயே மிகச்சிறந்த இயக்குனர் யார் என்று என்னைக்கேட்டால் அது இயக்குனர் சிகரம் திரு கே.பாலசசந்தர் அவர்கள் தான் என்பேன்.
என்ன மனுஷன்யா அவர். ஜீனியஸ் என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணம் கே.பி
நீர்க்குமிழி முதல் பொய் அவரை அவரது படங்களையும் படைப்புக்களையும் ரசித்தவர்களுக்கு தெரியும் .. அவரது திறமை..
அவரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்தாலே அமானுஷ்யம் தான்..
இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த இயக்குனர் யாரென்றால் அது கே.பி அவரைப்போல் சிந்திக்கவோ , பாத்திரப்படைப்போ
யாருமே செய்ததில்லை
அப்படி அவர் படைத்த ஒரு பாத்திரம் பாரதியாருக்கு பிடித்த கண்ணம்மா ஆம் அக்னிசாட்சியில் அவர் படைத்த கண்ணம்மாவும் ஒரு புதுமைப்பெண் தான்.
அவளுடைய உலகம் தமிழ் கவிதை ரசனை அதே நேரத்தில் எங்கே கொடுமை நடந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாத குணம் கொண்டவள் இந்த கண்ணம்மா
எதையும் இன்னொரு கோணத்திலிருந்து பார்ப்பவள் .. உதாரணத்திற்கு அவள் அம்மா தலையில் பூ வைக்க வரும்போது .. அந்த பூ குறித்து அவள் சொல்லும் கவிதை (புஷ்பங்கள் - இலை ஏடுகளில் கிளைப்பேனாவால்
விருட்சங்கள் வரைகின்ற விருத்தங்கள் ........ மனிதர்கள் மட்டுமே அவைகளை திருட வருகிறார்கள்- வாலியின் கவிதை அவளது உள்மனதை சொல்லும் கவிதை)
அதே போல் சிறுவர்கள் பட்டம் விட்டு பட்டம் கிழந்துவிட அதற்கு அழுவது , குழந்தை உருவம் கொண்ட மெழுகு பொம்மை உருக அதை தாங்கிக்கொள்ளா முடியாத கோபம் என இந்த பாத்திரப்படைப்பே வித்தியாசமாக
செய்திருப்பார் கே.பி.
அப்படி அவளுக்கு மாறுபட்ட சிந்தனை இருப்பதாலோ என்னவோ படத்தின் ஆரம்பத்திலேயே கே.பி ஒரு மேடை நாடகத்தை வைக்கிறார்
அதுவும் ஒரு மாறுபட்ட சிந்தனையோடு .. “இன்னொரு கண்ணகி”
கண்ணகி தன் கணவன் கோவலனுக்காக மதுரையை எரித்தாள் .. அதனால் அவள் வரலாற்றில் இடம்பெற்றாள் உண்மை
ஆனால் வேறு ஒருவளிடம் இருந்துவிட்டு பின் தன்னிடம் வந்தவன், ஊரைவிட்டு ஊர் வந்து வியாபாரம் செய்ய போன இடத்தில் சிலம்பால் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டவனுக்காக
ஒரு பெண் ஒரு ஊரையே எரிப்பது எந்த வகையில் நியாயம். எத்தனையோ அப்பாவி மக்களும் மடிந்தார்களே அப்படி மடிந்த ஒருவனின் மனைவி கண்ணகியிடம் நியாயம் கேட்பதாக ஒரு சிந்தனையை தூண்டிவிடுகிறாரே அது தான் கே.பி.
உலகில் மிகச்சிறந்த இயக்குனர் என்றால் அது கே.பி ஒருவர் தான்.. அவரது மூளை எந்த ஹாலிவுட் இயக்குனருக்கும் கூட இல்லாத ஒன்று ..
இந்த சிந்தனைக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம்
புதிய சிந்தனை கடினமான சூழலை சொல்லியாகிற்று .இப்பொழுது இன்னொரு மகான் நம் மெல்லிசை மாமன்னர் அவர் பங்குக்கு அமானுஷ்யத்தை காட்ட வேண்டாமா
இதோ அவர் குரலிலேயே துவங்குகிறார் இந்த மேடைப்படலை
இதில் இன்னொரு அமானுஷ்யம் வாலி அவர்கள். வார்த்தை அருவி ..
ஆரம்பம் அதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்
சிலப்பதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்
குரலிலேயே அந்த அதிகாரம் முடிந்தது ஆனால் இதோ இன்னொரு ஆரம்பம் என்ற அந்த தொனியில் அவரது குரல் ..
அநீதி கொன்றது மங்கையின் பதியை
அக்னி தின்றது மதுரையம்பதியை
ஆம் கண்ணகியாள் கற்பிற்கு இதோ இந்த அக்னி சாட்சி
அப்ப்டி அவர் பாடி முடித்ததும் கண்ணகியின் அந்த கோபக்கனலை உணர்த்தும் விதமாக எரியும் தீயின் இசை .. கண்ணகியின் தாண்டவம்
மதுரை எரிப்பு எல்லாமே ஒரு 10-15 நொடியில் சீமாவின் நடனமும் மன்னரின் இசையும் மிரட்ட
இன்னொரு பெண் வந்து நிறுத்து என்று குரல் கொடுக்க (வாணிஜெயராம்) அப்படியே நிசப்தமாக அந்த காட்சி .. அந்த நிறுத்துவிற்கு அத்தனை வலிமை
இப்பொழுது மெல்லிசை மேற்கத்திய இசையுடன் ஆரம்பம் அந்த இன்னொரு பெண்ணின் குமுறல்
ஆலவாய் நகரை அனல்வாய் சேர்த்து கோலவாய் சிவக்க கொக்கரிக்காதே ..
யார் நீ என கண்ணகி கேட்க
இன்னொரு கண்ணகி
என்ன
எண்ணிக்கொள் அப்படி .................
இடையிசையிலே உணர்வை சொல்வார் மன்னர் ..
உன்னுயிர்த் தலைவன் பொன்னுயிர்தனை காவலன் நீதி கவர்ந்தது போலே (மீண்டும் கண்ணகியின் தாண்டவ நடனம்)
என்னுயிர்த் தலைவன் இன்னுயிர்தனை இழந்து நிற்கும் ஏந்திழையாள் நானே (இசை மாற்றம் .. மெல்லிய இசை தபேலா மட்டும்)
யாரோ ஒருத்தி வந்து பேசினால் கண்ணகி மடங்கிவிடுவாளா .. தாண்டவம் தொடர்கிறது
ஈஸ்வரியக்கா பாடுகிறார்
பாண்டியன் எனது பொட்டழித்தான்
ஆயிழையே உன் நாயகன் தனது ஆவி பறித்தது யாரோ .....................
இப்பொழுது மீண்டும் அந்த தீ இசை இப்பொழுது இன்னொரு கண்ணகிக்கு
நீயே நீ வளர்த்த தீயே .................
கண்ணகி பொறுப்பாளா தன்னைக்குற்றம் சாட்டிவிட்டாள் அல்லவா . இதோ
குற்றத்தீர்பெழுதிய கூடல் மாநகரிது முற்றும் தீர்ந்திடவே தீ வைத்தேன் தொடரும் இசை அமர்க்களம்
துஷ்டக்காவலவன் அவன் இஷ்டக்கோவலனுடல் வெட்டிச்சாய்த்திட பழி நான் தீர்த்தேன்
தாண்டவம் தொடர்கிறது. அவளது செயல் நியாயம் என்பது போல் அவள் பாடுகிறாள்
இசை சோகத்து மாறுகிறது
இன்னொரு பெண் பாடுகிறாள்
நீதான் மூட்டிய தீயினில் வெந்தான் நங்கையின் ஆருயிர் காதலனே
நான் தான் மாலைகள் நாளைய காலை சூட்டிட வாய்த்த என் நாயகனே
காதலை நான் இழந்தேன் அதன் காரணம் நீ அல்லவோ
பிறன் காதலி உன்னாலே இங்கு கைம்பெண் ஆவதுவோ
என அழுதபடி குற்றம் சாட்டுகிறாள்
கண்ணகி அதற்கு பதிலளிக்கிறாள் இப்படி
வானும் நிலமும் புனலும் சுட வேந்தன் அரசும் மனையும் கெட ஆணையிடவும் அனலும் வர தீ தீ தீ (இருவரும் சேர்ந்து ஆடும் இசை ..... )
நகரம் முழுதும் தழலும் எழ உந்தன் தலைவன் உடலும் விழ அடியள் பிழையோ தவறோ இது சொல் சொல்
தொடரும் இசை ...... அபாரம்
இன்னொரு பெண் தொடர்கிறாள் இப்படி
குற்றமிழைத்தவன் செத்து மடிந்தபின் மற்ற உயிர்க்கேன் தண்டனையோ
உந்தன் இழப்பில் ஊரை எரிப்பது எந்த விதத்தினில் நெறி முறையோ
மற்ற உயிர்க்கு தீங்கு வராமலே உன்னை எரித்திங்கு காட்டிடுவேன்
இன்னொரு கண்ணகி என்று விளங்கிட கற்பு நெருப்பினை மூட்டிடுவேன் .........
கற்பின் கனலே வருக என் கட்டளை முடித்து தருக
கல் மனம் கொண்டாள் இவளை ஒரு கல்லாய் ஆக்கிவிடுக
மன்னர் இசையால் மிரட்டிய ஒரு காட்சியமைப்பு ..
மீண்டும் எழுகிறது மன்னர் குரல் ..
இப்படி ஒரு புதிய சிந்தனையாக இருந்தாலும் அது கற்பனையே என்று முடிக்கிறார்
இளங்கோ அடிகள் நூலால் விளைந்தது இந்த சிந்தனையே புதுச்சிந்தனையே வெறும் கற்பனையே
பூந்தமிழ் கற்ற புலவர்கள் எல்லாம் பொறுத்தருள்க என மன்னர் முடிப்பார்
இப்படி ஒரு மகத்தான சிந்தனையை கொண்டுவந்த கே.பி அவர்களையும் அப்படி ஒரு காட்சிக்கு இப்படி ஒரு மிரட்டலான இசைகோர்ப்பை செய்து அதை இசை விருந்தாக்கிய மாமன்னரையும்
இது ஒரு சவாலான பாடல் அதற்கு தன் வார்த்தைகளால் சந்தத்தில் விளையாடிய வாலி ஐயாவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
கனா காணும் கண்கள் பிரபலமடைந்ததால் இந்த பாடலின் சிறப்பு பலருக்கு தெரியாமலே போயிற்று இருந்தாலும் தெரிய வைக்கத்தானே நாமிருக்கிறோம்........
வாழ்க மன்னர் புகழ்
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment