Monday, March 15, 2021

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 7
மீண்டும் அதே கூட்டணி தான். இவர்கள் அமானுஷ்யத்தை குத்தகைக்கு எடுத்திருப்பார்கள் போல இவர்கள் பெருமையை சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம் ஆனாலும் முழுப்பெருமையையும் திறமையையும் சொல்லி முடிக்க நமக்கு ஆயுள் போதாது இன்றைய அமானுஷ்யம் படமே ஒரு அமானுஷ்யம் .. அதுவும் இந்த பாடல் கே.பி என்ற அந்த ஒரு மாமேதையால் மட்டுமே சிந்திக்க முடிந்த ஒன்று , வேறு எந்த கொம்பனாலும் முடியாத ஒன்று அதே போல் இப்படி ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னர் என்ற அந்த அமானுஷ்யத்தால் மட்டுமே சாத்தியம் .. வேறு யாராலும் முடியாது (தானே தனக்கு பட்டங்கள் சூட்டிக்கொண்டு வலம் வந்தாலும்) மன்னரின் மூளையோ மன்னரின் திறமையோ யாருக்கும் கிட்டாத ஒன்று. மன்னரின் மூளையை பாதுகாத்திருந்தால் 100 என்ன 1000 இசையமைப்பாளர்கள் அதிலிருந்து உருவாகியிருப்பார்கள் அப்படிப்பட்ட மூளை பாலசந்தர் அப்படி ஒரு சவால் விடுகிறார் மன்னருக்கு. எப்படி .... இதோ இப்படி உச்சகட்ட காட்சிகள் அதவாது க்ளைமாக்ஸ் என்பார்கள் ஆங்கிலத்தில் .. கதை எப்படி எப்படியோ போய் ஒரு முடிவிற்கு வரும் காட்சியே அது. ஒரு இயக்குனரின் முழு திறமையும் வெளிப்படும் இடம் இந்த க்ளைமாக்ஸ் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் வைக்கிறார் கே.பி .. என்ன புதிர் போடுகிறேனே என்று பார்க்கிறீர்களா சரி சரி இதோ சொல்லிவிடுகிறேன்... இவர்கள் எல்லோருமே அபூர்வமானவர்கள் அதனால்தானோ என்னவோ படத்தின் பெயரும் அபூர்வ ராகங்கள். இந்த படமும் இதன் பாடல்கள் பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை படத்தின் பெயரைப்போலவே பிரத்யேகமாக பாலமுரளி அவர்களிடம் கேட்டு மஹதி என்ற ராகத்தில் மன்னர் அமைத்து தாஸேட்டன் பாடிய அதிசய ராகம் பாடல் அடைந்த வெற்றி நான் சொல்ல வேண்டியதில்லை ஆனால் நாம் பேசப்போகும் பாடல் அமானுஷ்யம் வகையை சார்ந்தது .. க்ளைமாக்ஸ் என்று சொல்லிவிட்டேனே புரிந்திருக்குமே .. ஆம் கேள்வியின் நாயகனே பாடல் பாடலுக்கு போவதற்கு முன் ஒரு சில விஷயங்கள் காலம் காலமாக தந்தைக்கும் மகனுக்கும் மோதல் என்பது வழக்கமான ஒன்று .. அதுவும் விடலைப்பருவத்தில் அப்பாவை எதிரியாக பார்க்கும் இளைஞர் பட்டாளம் ஏராளம் அப்படி ஒரு இளைஞன் ,, முரட்டு இளைஞர்களால் தாக்கப்பட்டு வீதியில் கிடக்க அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் பாடகி பைரவி .. அவனது முரட்டு குணத்தை தன் அன்பால் மாற்றுகிறாள் அதுமட்டுல்ல அவனிடன் இருக்கும் இசை ஞானத்தையும் தூண்டுகிறாள் .. அவன் மிருதங்கம் வாசிப்பதை பாராட்டி அதில் அவன் மேலும் கற்றுக்கொள்ள உதவுகிறாள். ஒரு குழந்தையிடம் ஒரு நாயோ பூணையோ அல்லது பொம்மையோ கொடுத்தால் நாளடைவில் அது ஒருவித possessiveness வளர்ந்துவிடும் .. அந்த பொருள் தன்னுடையது என்பதாக நினைக்கும் அப்படி இவனும் அவள் குரலுக்கும் அவள் அன்பிற்கும் அடிமையாகிறான். அவள் மேல் காதல் கொள்கிறான்.. அதுவும் அவளொரு பைரவி என்று அவன் அதிசய ராகம் பாடலில் போட்டு உடைக்கும் காட்சியில் கன்னத்தில் ஒரு அறை விழுமே .. அப்படியும் அவன் மசிந்தானா என்ன ஹும் ஹும் அவன் பிடிவாதம் பிடிக்கிறான். அவளோ தன் நிலையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள் அதே போல் அவன் நல்லவனாக அவள் கொடுத்த வாக்குறுதியால் தவிக்கிறாள். தன் நண்பரான டாக்டரிடம்( நாகேஷ்) ஆலோசனையும் கேட்கிறாள் ..ஒரு வேளை தானும் அவனை விரும்புகிறோமோ என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்உ அவனை வீட்டை விட்டு துறத்தவும் முயல்கிறாள் ஆனால் அவனோ முழுசாய் மாறி நல்லவனாய் வந்து நிற்க ஏதும் செய்ய முடியாதவளாய் அவள் .. அவனது பிடிவாதத்திற்கும் அன்பிற்கும் கட்டுபடுகிறாள் (முழு மனதாய் அல்ல) எந்த இடத்திலும் விகாரமாகவோ விகல்பமாகவோ ஒரு காட்சியையும் வைக்காத கே.பியை ஏதோ பெரிய குற்றம் இழைத்தவர் போல் பேசிய இந்த சமூகம் எல்லாமே வக்கிர புத்தியுடையவர்கள் . (அவர்கள் மனதில் ஆயிரம் அழுக்கு ஆனால் வெளியே நல்லவர்களாய் வேஷம் போடுபவர்கள்) அதே சமயம். சிறிய வயதில் தன் காதலன் கொடுத்த குழந்தையை ஒரு ஹாஸ்டலில் விட்டு வளர்த்து வருகிறாள். தான் வேண்டாம் என்று நினைத்த தாயின் மீது அந்த குழந்தைக்கு வெறுப்பு . தாயும் வேண்டாம் தாயின் பணமும் வேண்டாம் என நினைக்கிறது அந்த பிஞ்சு உள்ளம் . வாழ்க்கை பயணத்தை தன் காலிலேயே தொடர நினைக்கிறது . அப்படி தானே வேலை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவளுக்கு நாடகம் பார்க்க போன இடத்தில் ஒரு பெரியவரின் அறிமுகம் கிடைக்க அதுவும் அவர் ஏன் அழுதாள் என கேட்டு அவரை குடைவதும் நகைச்சுவை பின் ஒருவழியாக அவர் தன் கதையை சொல்ல அதே பெரியவரை நடுரோட்டில் குடித்துவிட்டு காரில் மயங்கிய நிலையில் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்து பின் அவர் குடிப்பழக்கத்தை நிறுத்த வைத்து அவரது வீட்டில் தங்குகிறாள் .. இதை தவறாய் பார்ப்பவர்களுக்கு தவறு .. அவளைப்பொறுத்த வரையில் அது சரியே .. அப்படி தங்கி மெல்ல மெல்ல அவர் மேலொரு ஈடுபாட்டையும் வளர்த்துக்கொள்கிறாள் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. பெரியவர் தன்னால் முடிந்த வரை மறுத்து சொல்வார், ஊரார்கள் நகைப்பார்கள் (கை கொட்டி சிரிப்பார்கள்) என எல்லாம் சொல்லுவார். ஒரு கட்டத்தில் தன் மனைவி அம்ர்ந்த நாற்காலியில் இந்த பெண் கால் வைத்து ஏறியதற்காக அறையவும் செய்வார். அவரது க்ளப் நண்பர்களின் ஜாடை மாடையான பேச்சுக்களுக்கு அவள் தன் மகள் போன்றவள் என்றும் பதில் சொல்வார். இப்படி அந்த கதாப்பாத்திரமும் தன் வயதையும் நிலையையும் உணர்ந்தே அமைக்கப்பட்டிருக்கும். இப்படி இரண்டு பெரியவர்களும் ஒரு வித தயக்கத்துடனே சரி என்று சொல்லியிருந்தாலும் விதி வலியது .. பத்திரிக்கை ரூபத்தில் வந்தே தீரும். பத்திரிக்கையில் அம்மா பெண் புகைப்படத்துடன் கட்டுரை அவரோ நல்லவர் உடனே பைரவியை பார்க்க கிளம்புகிறார் ஆனாலும் பார்க்க முடியாததால் அவளது நண்பரை பார்க்க அப்படி பைரவியின் மகள் குறித்து தகவல் என கதை சூடுபிடிக்கும் அதுவும் பெரியவர் பெங்களூரில் பைரவியின் கச்சேரி ஏற்பாடு செய்யும்படி தன் க்ளப் நண்பர்களிடம் சொல்ல (அம்மாவையும் மகளையும் சந்திக்க வைக்கும் முயற்ச்சியில் பெரியவர்) தினசரியில் மகனை பிரிந்து வாடும் அப்பாவின் செய்தி (அவர் எப்படியாவது தன் மகனை தன்னிடம் வர வைக்கும் முயற்ச்சி) இதுவரை பைரவி ரஞ்சனி என்று தனித்தனியாக இருந்த காட்சிகள் எல்லாம் நேர்க்கோட்டில் வரப்போகின்றன என அறிவிக்கும் விதமாய் கே.பி “ராகமாலிகை” என்று கார்ட் போடுவாரே மனுஷன் மாமேதை .. அப்படியே அவன் கன்னத்தில் செல்லமாக முத்தமிடவேண்டும் ... (இதுவரை நடந்த அனைத்து காட்சிகளிலும் இன்னொரு ஹீரோ உண்டு அவர் தான் மெல்லிசை சக்ரவர்த்தி நம் மன்னர் .. என்ன ஒரு பின்னணி இசை படம் முழுவதும்0 இப்பொழுது கே.பி என்னும் அந்த ஜீனியஸ் விஸ்வரூபம் எடுக்கும் நேரம் .. ராகமாலிகை இப்படி தொடர்கிறது பெரியவர் பைரவி அறிமுகம்.. தந்தை மகன் உரையாடல் (ஸேம் ஓல்ட் சன், ஸேம் ஓல்ட் ஃபாதர்) தந்தயின் அனுமதி அவன் பைரவியை கல்யாணம் செய்து கொள்ள ....(அதுவும் கமலின் அந்த டோன் .. ஆமா ஆமா சொல்லத்தான் வந்தோம் என்பதுபோல் ஒரு அலட்சியம்) இன்னும் சற்று நேரத்தில் ஒரு பிரளயமே வரப்போவதை உணராமல் வேணும்னா காலில் விழுகிறோம் என்று அலட்சியமாக மகன் சொல்ல, சரி இரு அம்மாவை கூப்பிடுகிறேன் என்று அவர் சொன்னதும் அவன் முகம் போகும் போக்கு .... இன்னும் ஒரு படி மேல் .. அங்கே காபியுடன் மகள் வர அம்மாவிற்கு அதிர்ச்சி .. எப்படி இந்த கே.பியால் மட்டும் முடிகிறது .. இந்த காட்சி அப்படி ஒரு மிரட்டல் .. இந்த காட்சியின் பலம் மேஜர் சுந்தரரஜன் அவர்கள் .. மனுஷன் சும்மா அசத்தியிருப்பார் (அவர் எது நடக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதுவே நடந்தது0 கண்ணனின் கீதை போல் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .. ரஞ்சனி நீ என்னை கல்யாணம் செய்துக்கப்போற, என் பிள்ளை உங்க அம்மாவ கல்யாணம் செய்துக்கபோறான்.. மக்கள் உடனே ஆவேசமாக என்ன இது என தாம் தூம் என குதிக்க வேண்டியதில்லை. சிறியவர்கள் எப்படி பெற்றோர்களிடம் சண்டை போட்டு தவறான முடிவுகளை வாழ்க்கையில் எடுக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் வசனம் . நான் உங்க அம்மாவிற்கு மாமனார், அப்ப நீ உங்க அம்மாவிற்கு மாமியார் ( வயலின் அப்படியே நால்வரின் மன நிலையை படம்பிடிக்கு இசையால்) புதுமை புரட்சி .. உலத்துல யாருமே செய்யாத புரட்சிய நாம செய்யப்போறோம்.. யெஸ் என சொல்லி சிரிப்பார் பாருங்கள் அது இளைஞர்களுக்கான சாட்டையடி பின் தன் மகனைப்பார்த்து பிரசன்னா "இந்த கேள்விகளுக்கெல்லாம் நாயகன் நீ தான்” என அவர் சொன்னதும் காட்சி அந்த பெங்களூர் கச்சேரிக்கு மாறும் .. அப்பா அதாவது க்ளைமாக்ஸ் முடிச்சுக்களை ஒரு பாடல் மூலம் அவிழ்க்க வேண்டும் என்ற அந்த சிந்தனை கே.பிக்கு மட்டுமே சாத்தியம் .. ஒவ்வொருவர் மனதில் ஆயிரம் கேள்விகள், என்ன நடக்கப்போகிறது என்ற தவிப்பு .. ஒரு வித சிக்கலான சூழலை நாமே உருவாக்கிக்கொண்டுவிட்டோமோ என்ற கேள்வி இப்படி சஞ்சலத்துடன் அந்த கச்சேரி ஆரம்பிக்கிறது கேள்வியின் நாயகன் அவனாக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டியது அவள். அவளே நல்ல முடிவை பாடல் மூலம் தெரிவிக்கிறள். இதுவரை கே.பியின் விஸ்வரூபம்.. இனிமேல் மெல்லிசை மாமன்னர் மற்றும் கவியரசர் இருவரின் விஸ்வரூபம் .. மிருதங்கம் மிரட்ட (உணர்ச்சிகளை கொட்டி மிருதங்கம் வாசிப்பான் அவன்) பைரவியின் கச்சேரி ஆரம்பம் கேள்வியின் நாயகனே என வாணிஜெயராம் குரலால் ஆரம்பிக்க கண்ணால் கமலை ஸ்ரீவித்யா பார்ப்பாரே ஒரு பார்வை. அது 1000 கேள்விகளுக்கு சமம் கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - நாம் எல்லோரும் பார்க்கின்றோம் (கேள்வியின்) உலக மேடையில் எல்லோருமே நாடகம் நடிக்கின்றோம் என்று வாழ்க்கை தத்துவத்துடன் துவங்குகிறார் கவியரசர். எப்படி நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொள்கிறோம். மனித மனம் எப்படி குரங்கு போன்றது என்பதை வரும் சரணத்தில் விளக்குவார் கவியரசர் அதுமட்டுமல்லாது கமலிடம் கேட்பதாய் அமைத்திருப்பார் .. என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம் எப்படிப்பட்டது பார்த்தாயா என்று அவனை குத்துவது போல் வரிகள் மன்னரோ அச்சு அசல் ஒரு கர்நாடக கச்சேரி இசையை மிருதங்கம், வயலின், மோர்சிங் என மிரட்டியிருப்பார் பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று பாலருந்தும்போதா காளை வரும்? (என்ன ஒரு கேள்வி .................. ) சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா? வேலிக்குமேல் ஒருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? (இதை கேட்கும்பொழுது ஸ்ரீ கமலை பார்க்கும் பார்வை அப்பப்பா) ஒரு வித கலக்கத்தில் கமல் மிருதங்கம் வாசிப்பதை நிறுத்திவிட்டு வெளியேற .. அங்கு வயலின் மட்டும் ஒலிக்கும் இப்பொழுது இன்னொருவர் மிருதங்கம் வாசிக்க பாடல் தொடரும் (கேள்வியின்) இந்த இடத்தில் கடம் கஞ்சிரா மிருதங்கம் மூன்றுக்கும் போட்டியே நடக்கும் ஏற்கனவே அவளது கணவன் வந்திருந்தாலும் கமல் அவனை தன் மனைவியை பார்க்க விடவில்லை எவ்வளவோ முயன்று கடைசியில் கச்சேரி நடக்கும் இடத்திற்கே வந்து ஒரு பெண்ணிடம் ஸ்ரீவித்யாவிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தை கொடுக்கிறான் அவளது கணவன்(ரஜினி) அந்த கடிதத்தின் வரிகள் “உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கின்றேன் உனது தரிசனம் தேடி உன் மன்னிப்பை நாடி” இதை படித்தவளின் மன நிலையை இசையால் வார்த்தையால் கொடுத்திருப்பார்கள் மன்னரும் கவிஞரும் அழுவதா சிரிப்பதா .. ஏதோ இந்த புரியாத புதிருக்கு விடையாக ஆண்டவனே அனுப்பி வைத்திருக்கிறானோ காமிரா ஸ்ரீயின் கண்ணை மட்டுமே படம்பிடிக்க விழியோரத்தில் நீருடன் பாடலை தொடருவாள் தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தர்ம தரிசனத்தை தேடுகிறான் ( இந்த தேடுகின்றாள் என்று பாடும்போது ஸ்ரீயின் விழிகள் அந்த அரங்கையே தேடும் .. காமிராவும் உடன் தேடும்) அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ? செல்வாளோ? செல்வாளோ? தன் கணவனை பார்ப்பாளோ என்பதை எவ்வளவு அழகாய் கவியரசர் திருமலை, அலமேலு என் அழகாய் எழுதியிருக்க மெல்லிசை மன்னரின் அந்த மெட்டு செல்வாளோ .. செல்வாளோ ...... ஏக்கம் எட்டிப்பார்க்கும் .. அழுகை தொண்டையை அடைக்க கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு என்று மேலும் பாட முடியாமல்(எவ்வளவும் முயன்றாலும் .. கச்சேரியாவது இதாவது என் கணவரை பார்த்தால் போதும் என எழுந்து ஓடத்துடிக்கும் அவள் மனது) நா தழுதழுக்க .. சட்டென்று உடன் ஒலிக்கும் குரல் ஆம் மகள் மேடையேறி தாயுடன் சேர்ந்து பாடுகிறாள்.. (குரல் சசிரேகா) (கேள்வியின்) கே.பி என்ற ஜீனியஸ் எட்டிப்பார்க்கும் நேரமிது .. மெல்ல மகளை தாயுடன் மேடையேற்ற .. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்ற கவியரசரின் வரிகளுக்கு ஏற்ப அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து அழ (அந்த காமிரா கோணம் .......ஸ்ரீயின் முகமும் ஜெயசுதாவின் முகமும் ...........ஜீனியஸ் ஷாட்) கவியரசரின் முழு விஸ்வரூபம் இந்த சரணத்தில். அம்மாவும் மகளும் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொள்ளும் இந்த காட்சியை இப்படி எழுதுகிறார் தாய் -ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் மகள் - பார்த்துக்கொண்டால்... (ஸ்ரீ தன் மகளின் கரங்களை பற்றிக்கொள்ள) இனி நான் இருக்கிறேன் என்று மகள் சொல்வது போல் அந்த காட்சி தாய்- அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன? மகள் - இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? (இனிமேல் நம் பார்வை வேறல்ல என்று மகள் கொடுக்கும் உறுதி) இந்த இடத்தில் ஸ்ரீயின் முகம் ஜெயசுதாவின் முகம் .. தூரத்தில் ரஜினி .. இந்த மூவருக்கும் உண்டான தொடர்பை ஒரு ஷாட்டில் சொல்ல முடியுமா .. அதுதா கேபி தாய் - பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே (இனிமேல் என்னைவிட்டு போக மாட்டாயே என்பதாய் கேள்வி) நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே (தவறான முடிவெடுக்க இருந்தேனே வேதத்தை மறந்து நடக்கும் முன் நம் பேதம் மறைந்துவிட்டது என்று மகள் கூறுவது அவளுக்கு மட்டுமல்ல இளைய சமுதாயமே சொல்வதாய்) இந்த இடத்தில் இந்த வரியை ஜெயசுதா பாடுவதை கவனியுங்கள் தலையை குனிந்து பயந்து பாடி அம்மாவை பார்ப்பார் .. யோவ் பாலசந்தர் உன்னை கொண்டாட ஒரு யுகம் போதாது தாயும் மகளும் சேர்ந்தாயிற்று தாய் தாய் தானே உடனே அவளது முதல் கேள்வி .. (இது வரை நீ எப்படி இருந்தாய்) தாய் - கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன? மகள் - உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? உன்னை சந்திக்கவே உயிரோடு இருந்தேன் .. தாய்- உடல் எப்படி? (வயது வந்த பெண் தனியாக வாழ்வது என்பது ஆபத்து .. தாய்க்கே உண்டான பயத்துடன் கேள்வி கேட்கிறாள். உடல் எப்படி ) மகள்-முன்பு இருந்தாற்படி...( நான் ரஞ்சனி நெருப்பு .. சிந்தையில் முற்போக்காய் இருந்தாலும் உடலில் நெருப்பு) எப்படி உன்னிடம் இருந்து போகும்போது இருந்ததோ அப்படியே தாய்- மனம் எப்படி? ( மனம் மணம் 2’ம் பொருந்தும். இனிமேல் உன் மனம் எப்படி ) மகள்-நீ விரும்பும்படி...(இனிமேல் எல்லாமே நீ விரும்பும்படி) என்று முடிக்கிறாள் கேள்வியின் நாயகன் போய் கேளிவியின் நாயகியே என்று பாடுகிறாள் இருவரும் சேர்ந்து பாடுகிறார்கள் தாய் மகள் சேர்ந்தாகிவிட்டது. தன் மகள் தனக்கு கிடைக்க காரணம் அந்த பெரியவர். அவரது அன்பு மகனை அவரிடம் சேர்க்கும் பொறுப்பு இவளுக்கு இருக்கிறதே அவனுக்காக பாட்டிலேயே பதில் சொல்கிறாள் பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா (இந்த வரி பாடும்போது மேஜரின் தவிப்பு, ஸ்ரீ கமலை பார்த்து பாடுவது என மெய் சிலிர்க்கும்) சிவன் ரொம்பவும் ஏங்கிவிட்டர் .. இனியும் அவரை ஏங்க விடாதே பிடிவாதம் வேண்டாம் பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா (பக்கத்தில் இரு முருகா .பக்கத்திருமுருகா) திருமுருகா...திருமுருகா... உச்சஸ்தாயில் முடியும் அந்த கச்சேரி கே.பி என்ற ஜீனியஸ் அவர்களின் க்ளைமாக்ஸ் . பாடல் ஆரம்பத்தில் மேடையில் ஸ்ரீவித்யா மற்றும் கமல், கீழே பார்வையாளர் வரிசையில் மேஜர் மற்றும் ஜெயசுதா பாடலின் நடுவில் கமல் எழுந்து ஓரமாக போக ,, ஜெயசுதா எழுந்து மேடையில் தாயுடன் சேர ,, பாடலின் முடிவில் கமல் கீழே வந்து மேஜர் பக்கத்தில் உட்கார .. இது தான் சிறப்பான முடிவு என்று சொல்லாமல் சொல்லும் எங்கள் கே.பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இப்படி ஒரு காட்சியை தமிழ்த்திரையுலகம் அதுவரை கண்டதில்லை, ஒரு கச்சேரியை க்ளைமாக்ஸாக்கி அதில் தன் ஆளுமையை காட்டிய மெல்லிசை மன்னரும் .. இவர்கள் இருவரும் இப்படி மிரட்டினால் தன் பேனாவால் மிரட்டிய கவியரசர் ( ஒரு கண்ணும் மறு கண்ணும் அந்த சரணம் ஒன்று போதும் கவியரசரின் புகழ் பாட) இதே பாடலை தெலுங்கில் ரமேஷ் நாயுடு செய்திருப்பார். மன்னர் செய்ததையொட்டியே செய்திருப்பார். சுசீலாம்மா பாடியிருப்பார் தெலுங்கில் இப்படி ஒரு அமானுஷ்யம் யாரும் கண்டிராத ஒன்று .. அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா

4 comments:

  1. Passionately articulated in highlighting the legends behind the screen.

    ReplyDelete
  2. மிகவும் அருமை. பாடலை, கதையை, காட்சியமைப்பை, அற்புதமாக அமைந்த பாடல் வரிகளை, அருமை நடிகர்களை மறுபடி மனக்கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete