Monday, March 15, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 9
கிராமிய மனம் கமழும் பாடல்கள் அதாவது நாட்டுப்புற பாடல்கள் என்றால் உடனே ஒரு கூட்டம் என்னவோ கிராமிய மனத்தையே அவர் தான் கண்டுபிடித்த மாதிரி பொய்யான பிரச்சாரம் செய்து அவரின் வருகைக்கு பின்
தான் நாட்டுப்புற பாடல்களும் கிராமிய மனம் கமழும் இசையும் சினிமாவில் ஒலித்ததாய் சொல்லிக்கொண்டு அலையும் அறிவிலி கூட்டம் நிறையவே உள்ளது.
அவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் விதமாகவும் அவர்கள் கன்னத்தில்அறையும் விதமாகவும் தான் இந்த பதிவு.
மேதாவிகளே . ஜி.ராமனதான் காலத்திலேயே கிராமிய மனம் கமழும் பாடல்களை மிகவும் அழகாய் கொடுத்தார் .. சின்னக்குட்டி நாத்தனா துவங்கி பல பாடல்கள்
இருந்தாலும் கிராமிய மனம் கமழும் பாடல்களில் கொடிகட்டி இன்றும் மண்ணின் மனம் கமழும் இசை என்றால் அது திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்
மணப்பாறை மாடு கட்டி, சித்தாட கட்டிக்கிட்டு, மாமா மாமா, ஓடுகிற தண்ணியில, மண்ணுக்கு மரம் பாரமா , மாடுக்கார வேலா, இன்னும் பல பல
திஸ்ர நடையில் இவர்கள் உருவாக்கின மெட்டுக்கள் அதுவும் கிராமிய மனம் கமழும் பாடல்கள் ஏராளம் தாராளம்.
கிராமிய நடை என்றாலே அது மாமாவும் புகழேந்தியும் தான்.
இவர்கள் வரிசையில் மெல்லிசை மன்னரும்/ மன்னர்களும் தங்கள் பங்கிற்கு கிராமிய மனம் கமழும் பாடல்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்
இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படும் அடி என்னடி ராக்கம்மா . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எழுந்து ஆட வைக்கும் பாடல் .. மண்ணின் மனம் கமழும் பாடல்
மெல்லிசை மன்னரின் இசையும், கவியரசரின் வரிகளும் ஏழிசை வேந்தர் பாடிய விதமும் அதற்கு திரையில் நடிகர் திலகமும், ஜெயலலிதா, சுபா போட்ட ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது.
மன்னர் தான் எந்த வகை இசையையும் கொடுக்க வல்லவர் என நிரூபித்தவர். மேற்கத்திய பாணி அவருக்கு அல்வா என்றால் கிராமிய மனம் கமழும் இசையிலும் அவர் மெல்லிசை சக்ரவர்த்தி தான்.
எத்தனை எத்தனை கிராமிய மனம் கமழும் பாடல்கள் .. பாடல்கள் மட்டுமல்ல , மாட்டு வண்டி ஓட்டம், ரேக்ளா பந்தயம், கபடி, சிலம்பாட்டம் என கிராமிய மனம் கமழும் எத்தனையோ விளையாட்டுக்கள் மற்றும் பந்தயங்களுக்கும் அவர்
மிரட்டியிருக்கும் பின்னணி இசை இருட்டடிப்பு செய்யப்பட்டது என்ன காரணத்தினாலோ.. இன்றும் பின்னணி இசை என்றால் வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது ஆனால் தெய்வமகன், கர்ணன், ஞான ஒளி, உலகம் சுற்றும் வாலிபன்,
நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்
அப்படி ஒரு 5 1/2 நிமிடம் ஓடக்கூடிய ஒரு காட்சி.. மீனவ குப்பத்தின் பொங்கல் கொண்டாட்டம் அதற்கான கேலி கிண்டல், பின் குப்பங்களின் நடுவே படகு போட்டி .. இந்த 5 நிமிட காட்சியில் மெல்லிசை சக்ரவர்த்தியின் இசை ஆளுமையை
கண்டு வியப்பீர்கள். மனுஷன் மிரட்டியிருப்பார். பாட்டுக்கு ஒரு படகோட்டி .. பாட்டுக்கு மட்டுமல்ல .. பின்னணி இசைக்கும் தான் (தொட்டால் பூ மலரும் பாடலுக்கு முன் வரும் முன்னிசையை கேளுங்கள் நான் சொல்வது புரியும்)
முதலில் கொண்டாட்டத்திற்கும் பண்டிகைக்கும் உண்டான மங்கல இசையுடன் துவங்கும் காட்சி.. பெண்கள் கூட்டாக சுளகில் அரிசியை புடைத்து படைப்பது போலவும் , எஸ்.வி.ராம்தாஸ் முதலாளி நம்பியாரை வரவேற்று பொங்கல் பொங்குவதை
சொல்வதாகவும் துவங்கும் காட்சி, நம்பியார் ராம்தாஸின் குப்பம் தான் படகு போட்டியில் வெற்றி பெரும் என்று சொன்னவுடன்
போட்டி அறிவித்தல் போல் அந்த செண்டை மேளம் ஒலிக்க துவங்கும் பின் கோவில் மணியை சரோ ஒலிக்கவைக்க உடனே பெண்களின் நடனம் அப்பப்பா என்ன ஒரு இசை பின் நம்பியாரின் மனைவி ஜெயந்தி கோவில் மணியை அடிக்க
பெண்கள் எல்லோரு கடலை நோக்கி நடக்கும் அந்த காட்சியின் இசை அபாரம். தங்கள் வாழ்வின் ஆதாரமான அந்த கடல் தாய்க்கு பெண்கள் செய்யும் பூஜைக்கான இசை அழகோ அழகு
பூஜை செய்துவிட்டு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படகின் அருகே வர ஒவ்வொரு படகோட்டியும் நான் தயார் என்பது போல் சைகை காட்ட பெண்களின் நடனம்
சொடுக்கு இசை, செண்டை , இரு புறமும் பெண்களின் நடனம் நடுவே சரோவின் ஒய்யாரம், அந்த பக்கம் ஆண்கள் கூட்டத்தின் நடனம் என விழா மெல்ல மெல்ல கோலாகலம் அடைவதை இசையால் அறிவித்திருப்பார் மன்னர்
நடனம் மெல்லமாய் ஆரம்பித்து அப்படியே சூடுபிடிக்க அவருக்கும் ரொம்பவும் பிடித்த ஷெனாய் ஒலிக்க( நாகேஷ் வாசிப்பதாய்) அப்படியே கொண்டுபோய் சரோ அந்த மாறுவேட கிழவர் வடிவில் வந்திருப்பது தன் காதலன் எம்.ஜி,ஆர் என்பதை
அறிந்து கொள்ளும் அந்த நொடிக்கு கூட ஒரு இசை பின் நம்பியாருக்கு அது தெரியக்கூடாது என்பதாய் வரும் நடனமும் இசையும் அழகோ அழகு.. நம்பியாரை தடுக்கும் காட்சி பின் தொடரும் நடனமும் இசையும் என்ன சொல்வது..
கண்ணை இமைக்காமல் பார்க்க வைக்கும் . சும்மா அதிருதுல்ல என்ற வார்த்தை எல்லாம் அப்பவே வந்துவிட்டது இந்த இசையால் நடனத்தால்..
இவர்களின் இந்த இடைவிடா நடனத்தில் தன்னையும் அறியாமல் நம்பியாரும் சேர்ந்து கொள்ள ஒரே கும்மாளம் தான் கொண்டாட்டம் தான் பின் விசில் சத்ததுத்துடன் படகு போட்டி துவக்கம்
போட்டியின் முன் அறிவிப்பு தான் அந்த நடனமும் இசையும் .. என்ன ஒரு மிரட்டல்
விசிலை தொடர்ந்து போட்டிக்கு கொடிகாட்டி மணி அடிக்கும் இசையும் மிகவும் அழகாய் கேட்கும்.. கொடி அசைந்தவுடன் சீறும் சிங்கமாய்/ ஜல்லிக்கட்டு காளைகள் போல் படகுகள் கிளம்பும் அந்த இசை ஆர்ப்பரிப்பு அப்பப்பா
துடுப்பு விட்டு விட்டு போடும் இசை, தண்ணியின் தழும்பலிசை பின் உற்சாக படுத்திக்கொள்ள படகில் உள்ளவர்கள் செய்யும் சத்தம்/ஒலி அதுவே ஐலசாவாக மாற
மெதுவாக கிளம்பிய படகுகள் வேகமெடுக்க கூடவே துடுப்பிசை, தண்ணீர் தழும்பல், ஐலசா எல்லாமே வேகமெடுக்க
இரு குப்பங்களின் மக்களும் தலைவர்களும் ஆர்வமாய் பார்க்க உடனே இத்தனை ஒலிகளோடு சேர்ந்து கொள்ளும் மேள இசையும் அதுவரை திரையில் பார்த்திராத புதுமை ( ஜெமினியின் சந்திரலேக டிரம் நடனம் எல்லாம் ஒரு மாதிரி என்றாலும்)
ஒரு ஒட்டுமொத்த காட்சியை இப்படி பல்வேறு இசை வடிவங்களில் மிரட்டுவது என்பது இதுவே முதன் முறை.
டி.பிரகாஷ்ராவ் அவர்களின் காட்சியமைப்பும், பி.எல்.ராய் அவர்களின் ஒளிப்பதிவும் காட்சிக்கு கூடுதல் பலம்.
போட்டி வலுக்க இரு அணிகளின் படகும் மின்னல் வேகத்தில் ஓட இந்த சத்ததிலும் தாத்தாவாக எம்.ஜி.ஆர் தன் கைத்தடியால் அசோகனை தட்டும் அந்த ஒலி கூட துல்லியமாய் கேட்கும்
இருவரது கம்பு சண்டையும் அங்கே அரங்கேறும் . எம்.ஜி.ஆரின் படகு வெற்றியை நோக்கி வரும் வேளையில் இத்தனை இசையுடன் கை தட்டல், விசில் என எல்லாம் சேர்ந்து கொள்ளும் காட்சி அமர்க்களம்.
ஒரு 5 நிமிட காட்சிக்குள் எத்தனை எத்தனை ஜாலங்கள் செய்திருக்கிறார் மன்னர். இவர் செய்தது எல்லாம் அமானுஷ்யமே அன்றி வேறொன்றுமில்லை
5 1/2 நிமிடம் ஓடும் காணொளி comments’ல் கண்டு மகிழவும்
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
https://www.youtube.com/watch?v=xDjP3ffXVGw
ReplyDeleteசபாஷ்.. அருமையான பதிவு.. வாழ்த்துகள் ..
ReplyDelete