Monday, March 15, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 8
அமானுஷ்யம் என்று எதை சொல்வோம்.. நம் அறிவிற்கு எட்டாததை .. ஏதோ நம்மையும் மீறிய சக்தி .. திகிலூட்டுவது என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
மன்னரின் இசையும் அவர் எதை எபப்டி கையாள்வார் என்பதும் யாருக்கும் தெரியாத ஒன்று. PATTERN என்ற வார்த்தையை உடைத்தெரிந்தவர் . இது தான் வரும் என நாம் நினைத்தால்
அங்கே எதிர்பாராத ஒன்றை தருவார் அது தான் மெல்லிசை சக்ரவர்த்தி .. எம்.எஸ்.வி அவர்களின் திறன். அதனால் தான் இந்த தலைப்பு.
இன்றைய அமானுஷ்யம் சற்று வித்தியாசமானது.
படத்தில் ஒரு காட்சி .. கதா நாயகனின் காதல் இவ்வளவு ஆழமானதா என்று நினைத்து அதற்கு தான் அருகதை உள்ளவளா என்று நினைத்து அவள் விலகும் போது காதலன் அவளை
இழுக்க பாடும் சோக கீதம் இன்றும் அது அற்புத பாடலாய் திகழ்கிறது .. பாடல் எது என்பது நான் சொல்லி தெரியவேண்டுமா ..
வாலி அவர்களின் வரிகளை மனதை உருக்கும் விதமாக ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் பாடிய “உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா”
என்ன அருமையான இசை, அர்த்தமுள்ள வரிகள் .. உணர்வுகள் பொங்கும் டி.எம்.எஸ் குரல் .. திரையில் ஆணழகன் எங்கள் புரட்சித்தலைவர்
இவ்வளவு இருந்தும் அந்த பாடல் ஒரு சோகம் இழையோடும் பாடல்.. அட படத்தின் பெயர் வரும் இந்த பாடல் சந்தோஷமாக இருந்தால் எப்படி இருக்கும் என படம் பார்த்த ரசிகர்கள்
நினைத்திருப்பார்கள். அவர்களின் நாடி பிடித்து பார்த்தது போல் ஏ.சி.டியும் மெல்லிசை மன்னரும் செய்திருந்த மிரட்டல் தான் படத்தின் கடைசி 6 நிமிடங்கள்.
அசோகன் மக்கள் திலகத்திற்கும் சரோவிற்கு இடையே உள்ள காதலை உணர்ந்து விலகிக்கொள்ள காதலர் இருவரும் இணையும் நேரத்தில் பாலுவாக நடித்தது முதலாளி ஜே.பி என்பது தெரிய வரும் பொழுது
ஏற்கனவே பல முறை மோதல், நடிப்பு என்று இவர்களுக்கிடையே இருந்ததால் மீண்டும் அவரே வெற்றி பெற்றார். தான் காதலித்த பாலு தனக்கு கிடைக்கவில்லை, பணக்கார ஜே.பி தனக்கு வேண்டாம்.
இதிலும் உங்களுக்கு வெற்றி என்று தானே (female ego) பலவற்றையும் கற்பனை செய்துகொண்டு சரோ தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரில் ஏறி வேகமாக ஓட்ட
பின் தொடரும் தலைவர் பின் ஹோட்டலில் கத்தி காந்தாராவுடன் சண்டை அது முடிந்து இருவரும் கண்களால் பேசும் காட்சிக்கு மன்னர் கொடுத்திருக்கும் இசை ஆஹா
என்னை விட்டா போகப்பார்க்கிறாய் என்பதாய் தலைவர் கோபமாய் பார்க்க , நானா போவேனா என்று சரோ தன் மீன் விழியால் பதில் சொல்ல பின் தலைவர் புன்னகைக்க கண்களின் பாவம் மாறுவதும்
அந்த பின்னணி இசை அபப்டியே காதலர்களின் இதயத்தை பிரதிபலிக்கும் அப்படியே தலைவர் கை நீட்ட அவர் கையில் தன் கையை வைப்பார் சரோ .. பின் நடந்தது என்ன .
முன்பெல்லாம் கதைகளில் குறிப்பாக சிண்ட்ரெல்லா கதைகளில் வருவது போல் அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்பது போல்
சட்டென்று இசை தொடங்கும்.. அது தான் மெல்லிசை மன்னர். காதலர்கள் இருவரும் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சி, ஒரு தொழிலதிபர் மன நிம்மதிக்காக சிம்லா வந்து தன் வாழ்க்கை துணையை கண்டுகொண்ட மகிழ்ச்சி
தான் வெளியே வெறுத்தாலும் உள்ளே அளவில்லா ஆசை கொண்ட தன் பாலு/ஜே.பி தனக்கு கிடைத்த சந்தோஷம் எல்லாமே வெறும் இசையிலும் .. அன்பே வா என்ற அந்த 2 வார்த்தையை மட்டும் பயன்படுத்தி ஒரு 5 நிமிட இசை ராஜாங்கம்
நடத்தியிருப்பார் மெல்லிசை மாமன்னர். அதை அவ்வளவு அழகாய் படமாக்கியிருப்பார் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள்
அமர்க்களமான மேற்கத்திய இசையுடன் துவங்கும் ஆர்ப்பாட்டம் .. அடேயப்பா .. துள்ளலாய் எம்.ஜி.ஆர், தக தகவென ஜொலிக்கும் சரோ , பூச்சரங்களால் சுற்றிய சரோ, தலைவர் சரங்களை இழுக்க, சரோ ஹ்ம்ம் வரமாட்டேன் என சொல்ல
கொஞ்சலாய் முறைப்பார் .. பின் இருவரும் சிரிக்க.. இசையும் துள்ளும் .. துள்ளாதா .. காதலர்கள் இணைந்த சந்தோஷமாயிற்றே .. அன்பே வா என அழகாய் துள்ளலாய் இந்த முறை உற்சாகமாய் பாடுவார் டி.எம்.எஸ் .. சரோ மெல்ல மெல்ல
அவர் அருகே வருவார். இசையோ மயக்கும்.. FAIRY TALE போல் தேவதைகள் வாழ்த்த வேண்டாமா . தேவதைகள் போன்ற பெண்கள் (சி.ஐ.டி சகுந்தலா ஒரு நடன மங்கை அந்த குழுவில்) அவர்களும் கோரஸாய் அன்பே வா என்று பாட
ஆனந்தம் அரம்பம்(அனைவரும் மயில் போன்ற உடை அணிந்து ஆடியபடி அன்பே வா என்பார்கள்)
இப்பொழுது தலைவர் பாடுவார் .. “உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் கண்டேன் அன்பே வா” மெல்ல சரோவை நோக்கி நடக்க சரோ வெட்கதுடன் தலை குணிந்து செல்வார் .. மிக அழகு.இசையும் அவரோடு நடக்கும்
கண்கள் என்னும் சோலையிலே தென்றல் கண்டேன் அன்பே வா என்று பாடுவார் .. உடன் வரும் இசை அபாரம்.
நடன மங்கையர் சுழன்றபடி அன்பே வா என்று கோஷ்டி கானம் பாடுவார்கள். இனி வரிகள் இல்லை .. இசை இசை ஆட்சி மட்டுமே..
பெண்கள் குடை படித்தபடி நடனமாட அதற்கொரு இசை சட்டென்று தலைவரும் சரோவும் தோன்ற உடனே பாரம்பரிய இசை (தபேலா விளையாடும்)
இது எல்லாமே அவர்கள் அடைந்த ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம் என்பதை பிரதிபலிக்கும் இசை..
இப்பொழுது அப்படியே உற்சாகம் பொங்கும் இசை . நடன பெண்கள் பட்டாம்பூச்சி வேடமிட்டு துள்ளுவார்கள். இசையும் ஊற்றாய் பொங்கும்
பின் புடவை உடுத்திய நடன பெண்கள் பூச்சரங்களை சுற்ற தொடரும் பாரம்பரிய இசை .. அப்பா என்ன ஒரு இசை விருந்து ..
கூர்ந்து கவனித்தால் ஒரு திருமண ஏற்பாடே இந்த இசையில் காணலாம். தோழிகள் இருவரையும் தயார் செய்வதாய் இசை அமைந்திருக்கும்.
தொடரும் பெண்களின் நடனமும் அதற்கான இசையும் அடேயப்பா என்னவென்று சொல்வது . ஒளிப்பதிவாளரும் அவர் பங்குக்கு மிரட்டியிருப்பார்
மங்கலம் என்றால் மன்னருக்கு ஷெனாய் தானே .. துள்ளி துள்ளி என்னை வாசியுங்கள் என்பது போல் ஷெனாய் ஒலிக்கும் .. இந்த இடம் அபாரம்
அபப்டியே தாலி கட்டி மேளம் கொட்டுவதை ஷெனாய் இசையால் பூர்த்தி செய்திருப்பார் மன்னர். கல்யாணம் முடிந்து இருவரும் அக்னியை வலம் வருவதையும் அழகாய் காண்பித்திருப்பார் ஏ.சி.டி
ஷெனாய் விளையாடும் .. (ஷெனாய் என்றாலே சத்யம் தானே .. என்னமாய் வாசிப்பார்)
திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி .. ஒவ்வொருவராய் அறிமுகம் செய்வது போல் இசை தொடரும்
அசோகன் அறிமுகம், ராமாராவ் மாதவி அறிமுகம், பின் தொடரும் பெண்களின் நடன் .. மீண்டும் மேற்கத்திய இசை பின் மீண்டும் பாரம்பரிய இசை என எல்லோரும் சேர்ந்து ஆடியபடி
பின் அந்த பெண்கள் அன்பே வா அன்பே வா கோஷ்டி கானம் இசைக்க .. குழுவில் நாகேஷ் மனோரமாவும் துள்ளி துள்ளி ஆட
டி.ஆர்.ராமசந்திரன் மற்றும் முத்துலெட்சுமி அறிமுகம் . அது கூட இசை வடிவில் ..
கடைசியில் ஆண்கள் தலைவரையும், பெண்கள் சரோவையும் முதலிரவு அறைக்குள் தள்ளும் விதமாய் அந்த காட்சி முடியும் ..
அடேயப்பா படம் முடிந்து விட்ட நிலையில் கடைசி ஒரு 5 நிமிடத்திற்காக இவ்வளவு இசை மிரட்டலா அதை வீணடிக்காமல் .. காதலர்கள் கல்யாணம் செய்து நல்லபடியாக வாழ்ந்தார்கள் என்பதை காட்டுவதற்கு
2 வரி, மற்றும் 2 வார்த்தை அன்பே வா அதை மட்டும் வைத்துக்கொண்டு மன்னரும் .. அதற்காக ஏ.சி.டியும் .. செய்திருக்கும் ஜாலம்.. அபாரம் அருமை .. சொல்ல வார்த்தையில்லை.
மன்னரின் இந்த 5-6 நிமிட இசையாட்சி அமானுஷ்யம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment