Saturday, July 10, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 12
ப்ளேபாய்(playboy) கதாப்பாத்திரங்கள் தமிழ்த்திரையில் நிறைய உண்டு
அந்த கதாப்பாத்திரங்களுக்கான தீம் இசை(theme music) பல படங்களில் பலரும் செய்துள்ளனர்.
ஆனால் ஒரு ப்ளேபாய் கதாப்பாத்திரம் எப்படி வலை விரிக்கிறான். அவள் எப்படி சிக்குகிறாள் என்பதை பொறி வைத்து எலியை பிடிப்பதுபோல் ஆங்கிலத்தில் ட்ராப்(TRAP) என்பார்களே
அதையும் இசையில் காண்பிக்க முடியும் என நிரூபித்தவர் மெல்லிசை மா மன்னர் ..
ஏற்கனவே போலீஸ்காரன் மகள் திரையில் 3 பெண்களை மயக்கும் ப்ளேபாய் கதாப்பத்திரம் பாடுவதாய் வந்த “ஆண்டொன்று போனால்” பாடலில் 3 பெண்களையும் 3 வெவ்வேறு இடத்தில் பார்ப்பதால்
அந்தந்த இடத்திற்கும் சூழலுக்கும் இசையால் காட்சியை விளக்கியிருந்தாலும் இந்த பாடலில் ஒரு பெண்ணை கண் வைத்துவிட்டான் அவளை எப்படி தன் வலையில் சிக்க வைக்கிறான் அவளும் எப்படி விழுகிறாள் எல்லாமே ஒரு பாடலில்
சாத்தியமா .. இதோ சாத்தியம் என்கிறார் மெல்லிசை மாமன்னார்.. அவர் கைவசம் தான் இரண்டு கருவிகள் உள்ளனவே ஒன்று கவியரசர் கண்ணதாசன் இன்னொன்று சுசீலாம்மா .. இந்த கருவிகள் தான் அவர் நினைத்ததை எல்லாம் செய்ய வல்லவையாயிற்றே
இதோ இங்கே ஒருத்தி நீராடுகிறாள் எங்கேயாம்.. குற்றாலத்தில் அதுவும் எப்படியாம்.. தென்றலில் அவளது ஆடை பின்ன தேன்வருவி அவள் உடலை நனைத்து அது மின்ன .. ஆஹா கவியரசரின் சொல்லாடலை என்ன சொல்ல
ஆரம்பத்தில் அருவி என்றவுடன் வரும் சிதாரோ மாண்டலினோ அப்பப்பா கே.ஆர்.வியின் மேல் மட்டுமா நீர் தெளிக்கிறது நம் மீதும் தான்.. என்ன இசை...
அவள் குற்றாலத்தில் தேனருவியில் குளித்துக்கொண்டிருந்தாளாம் அதை அவ்வளவு அழகாக பல்லவியில் கவியரசர் கொண்டுவர . குழலோ குரலோ என கேட்கும்விதமாய் சுசீலாம்மா மட்டுமே பாட முடிந்த பாடல் இது.
பல்லவியில் வரும் தென்றலில் ஆடை பின்ன ஒரு தடவை மட்டுமே மீண்டும் பாடப்படும் காரணம் .அவள் தனக்கு நடந்ததை விவரிக்கிறாள். பின் அவன் எப்படி வலை விரித்தான் தான் எப்படி விழுந்தேன் என்று சொல்லும் விதமாக போவதால்
மீண்டும் மீண்டும் தேனருவியில் நனைய தேவையில்லை .. என்ன கற்பனை . இயக்குனர் பி.மாதவன் என்ற அருமையான கலைஞரையும் சொல்ல வேண்டும்.. மிகவும் நேர்த்தியான இயக்குனர். காட்சியமைப்பில் கெட்டிக்காரர் . அது இதிலும் நிரூபித்திருப்பார்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
அப்படி அவள் நீராடுகையில் நீர் தன் உடைகளை நனைக்க அதை சரி செய்யும் போது பெண்ணுக்கே உண்டான அந்த புத்தி கூர்மை வெளிப்பட யாரோ தன்னை பார்ப்பது அவளுக்கு புலப்படுகிறதாம்..
பாராத விழியிரண்டு பார்ப்பதை அவள் அறிந்தாளாம் .. அந்த கோலத்தில் இருப்பதை மறந்து வெட்கம் மேலோங்கியதாம்..
அப்பப்பா இந்த பாடலை எத்தனை தடவை பார்த்திருப்பேன் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொருமுறையும் வியப்பு மட்டுமே மேலிடும்.. இசை கேட்கவே வேண்டாம்
அதுவும் அந்த இரண்டாவது முறையாக தென்றலில் ஆடை பின்ன என சுசீலாம்மா பாடுவது அவனை கண்ட அந்த அச்சம் பயம் நாணம் என எல்லாம் அந்த குரலில் தெரியும் ..
பாலாடை பளபளக்க
மேலாடை சாய்த்து எடுத்தேன்
பாலாடை பளபளக்க
மேலாடை சாய்த்து எடுத்தேன்
பாராத விழியிரண்டு
பார்ப்பதை நான் அறிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
கோவில் மணியோடு வரும் இடையிசை ... குளித்து முடித்து கோவிலுக்கு செல்லும் வழக்கம் அவளுக்கு. அங்கேயும் அதே விழிகள் தொடர்கிறதாம்.. இதில் நேரத்தை நான் மறந்தேன் என்று ஒரு வரி போட்டிருப்பார்
கவியரசர் .. அப்படி என்றால் என்ன .. குளித்து முடித்து பக்தியுடன் கோவிலுக்கு வந்திருக்கும் அவளுக்கு அதே விழிகளை பார்த்ததும் பகல் இரவு காலை மாலை என நேரம் மறந்துவிட்டதாம் .. எப்படி இருக்கு பாருங்கள்
இன்றைய பெண்ணாக இருந்தால் இந்நேரம் அவன் லாக்கப்பில் இருந்திருப்பான் ஹி ஹி சரி சரி
ஆனைமுகன் கோவிலிலே
அந்தி படும் வேளையிலே
ஆனைமுகன் கோவிலிலே
அந்தி படும் வேளையிலே
கன்னி வலம் சுற்றி வந்தேன்
கண்ணிரண்டை அங்கும் கண்டேன்
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலை குனிந்தேன்
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலை குனிந்தேன்…
கோவில் முடித்து வழியில் கடைத்தெருவில் வளையல் கடையில் வளையல்கள் பார்த்துக்கொண்இருந்த வேளையில் அதே விழிகள் தொடர்ந்தனவாம். இம்முறை தைரியமாக கையை தொடவும் செய்தானாம் ..
ட்ராப் என்று சொன்னேனே அதை இசையில் உணர்த்துவார் மெல்லிசை மாமன்னர்.. இந்த சரணத்தில் வெஸ்டர்ன் இசை கொடுப்பார் பாருங்கள் அவன் வேகமாக முன்னேறுகிறான்.. அவள் மீது கண் வைத்து தொடர்ந்து இப்பொழுது
அடுத்து என்ன செய்யப்போகிறான் என்ற எதிர்ப்பார்ப்பை அந்த இசை கொடுக்கும்
பாடல் முழுக்க MONTAGE வடிவில் தான். அதனால் குரலுக்கு கூடுதல் வேலை.. சுசீலாம்மாவின் அசுரப்பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. அந்த அம்மம்மா மெய் சிலிர்த்தேன் என்று சொல்லும் இடம் போதும்.. இசைப்பேரரசியின்
குரல் செய்யும் ஜாலத்தை பற்றி என்ன சொன்ன .. கண்ணன் செய்யும் ஜாலத்தை பற்றி போய் சொல்ல யசோதை இருந்தாள் இங்கு நம் இசைப்பேரரசியின் குரல் செய்யும் ஜாலத்தை அந்த கலைமகளிடம் தான் சொல்ல வேண்டும்
அது குரல் இல்லை .. குழல் தேன்குழல்
அச்சத்தால் தலை குனிந்தேன் என்ற இடத்தில் படம் பிடித்த விதமும் அருமை. இரண்டு வளையல்களுக்குல் இருவரது முகமும் காண்பிப்பது அபாரம்.
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
என்னோடு கையிரண்டு
இணைவதை நான் அறிந்தேன்
அம்மம்மா மெய்சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
அம்மம்மா மெய்சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
அவன் தொடர்ந்தான் தொட்டான். இவளும் விழுந்தாள் .. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா என்று வாலி சொன்னது போல் இவளும் மெல்ல மெல்ல அவன்பால் ஈர்க்கப்படுகிறாள்
அந்த உணர்வை அவள் கையில் பூக்கள் கொண்டு கோவில் படியிறங்கி வரும் அந்த அழகிலேயும் அந்த இசையிலும் சொல்லியிருப்பது ஆஹா ஆஹா ..
அவள் கொட்டிய பூ கால் தேடி போயிற்றாம் .. அவனது கண்ணை நேருக்கு நேராக பார்த்து இவள் தலை குனிந்தாளாம்.. இந்த இடத்தில் சுசீலாம்மாவின் குரல் காதல் உணர்வால் தவிக்கும். கே.ஆர்.வி ஒன்றும் செய்யவேண்டியதில்லை
சுசீலாம்மா பாடியிருப்பதுபோல் முகபாவம் கொடுத்தால் போதும்
கை நிறைய பூ எடுத்து
காற்றுப் போல் நடந்து வந்தேன்
கை நழுவிப் பூ விழுந்து
கால் தேடி போக கண்டேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்து தலை குனிந்தேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்து தலை குனிந்தேன்
இப்பொழுது இருவரும் பார்வையாலேயே பேசிக்கொண்டு அவளும் அவன்பால் ஈர்க்கப்பட்டுவிட பின் என்ன அவன் நினைத்ததை முடிப்பவனாயிற்றே .. அவள் தன்னையே கொடுக்கிறாள் அவனிடம் மயங்கி
இந்த பாவத்தை விரசம் இல்லாமல் பாட ஒருவரால் மட்டுமே முடியும் அது இசையரசியால் மட்டுமே முடியும்
காந்தர்வ விவாகம் என்பதாக இருவரும் வரும் காட்சி அந்த ராத்திரியின் சூழலை இசையில் கொடுக்கும் ..
அந்த மேகம் மறைத்த நிலா என சுசீலாம்மா உச்சஸ்தாயில் பாடுவது நிலாவையே கிழித்துக்கொண்டு போகும் கத்தி போல் .. என்ன இனிமை என்ன குளுமை என்ன பாவம் ... அவன் விரித்த வலையில் விழுந்து அவளைப்பொருத்த
மட்டில் அது ஆனந்தமான இரவு அந்த உணர்வின் வெளிப்பாடாய் அந்த மேகம் மறைந்த நிலா நீட்டிப்பு .. போங்கப்பா மெல்லிசை மன்னரையும் இசையரசியையும் கவியரசரையும் பாராட்டி பாராட்டி விரல்கள் வலிக்கின்றன
இருள் சூழ என்பதையும் அவள் வாழ்வின் ஒளி மறையப்போகிறது என்பதையும் கவிஞர் சொல்லாமல் சொல்வது சிறப்பு .. அந்த இருளில் எங்கிருந்தோ வரும் சிறு ஒளியின் வெளிச்சத்தில் அவள் அவனோடு இணைந்தாளாம் என்ன அழகான
கவிதையாக வடித்திருக்கிறார் கவியரசர் . தன் தேகம் மறந்தாளாம்.. தன் தெய்வத்தோடு இணைந்தாளாம்.. அதற்குள் அவன் அவளது தெய்வமாகிவிட்டானாம் .. அது தான் அவன் திறமை இவள் அறியாமை .. அவள் வாழ்க்கையையே புரட்டிப்போடப்போவதும் அது தான் என்பது
அவளுக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை
மேகம் மறைத்த நிலா
மேகம் மறைத்த நிலா
விளக்கொளி ஏதுமில்லை
மோதும் சிறு ஒளியில்
முகத்தில் முகம் இணைத்தேன்
தேகம் மறந்துவிட்டேன்
தெய்வத்தில் நான் இணைந்தேன்
தேகம் மறந்துவிட்டேன்
தெய்வத்தில் நான் இணைந்தேன்
நான் சொன்னது போல் ட்ராப்க்கான பாடலிது .. மெல்ல மெல்ல அவனது வலையில் அவள் விழுந்து அவனோடு இணைவதை ஒரு கதை கவிதை போல் பாடலில் வடிக்க முடியும் என நிரூபித்தவர் மெல்லிசை மாமன்னர்
அதை விரலால் நிரூபித்தவர் கவியரசர், குரலால் மெருகேற்றியது நம் இசையரசி சுசீலாம்மா..
என்ன சொல்ல இதெல்லாம் தெய்வீகம் அமானுஷ்யம் .. நம் அறிவிற்கு எட்டாத ஒன்று ..
கண்ணே பாப்பா திரையில் ஒலித்த இந்த பாடலை அமானுஷ்யம் என்று சொல்வதில் வியப்பேதுமில்லை
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment