Tuesday, January 11, 2022

எதிர் நீச்சல்-பாலச்சந்தர் ஒரு பார்வை

7.எதிர் நீச்சல் - வாழ்வில் ஜெயிக்க நிச்சயம் தேவை எதிர் நீச்சல் (1968) கலாகேந்திரா தயாரிப்பில் வந்த முதல் பதிப்பு
மனித உணர்வுகளையும், சமூகத்தையும் மிக அருமையாக பிரதிபலித்த படம் இது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் நாயகனை எதிர்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் என்று முன்பே முடிவு செய்யப்படாத கதை.. அதேபோல் வில்லன் என்ற ஒரு பாத்திரம் இங்கு இல்லை ..கதாபாத்திரங்கள் அவர்களுக்குறிய நல்ல குணங்களலால் நல்லவர்களாகவும், தீய குணங்களால் தீயவர்களாகவும் ஆகிறார்கள் அதாவது நல்லவர்/கெட்டவர் என்று முன்பே முத்திரை குத்தாமல் ஒவ்வொரு கதாபாத்திரமும் சூழ்நிலைக்கு ஏற்ப நடக்கவைத்திருக்கும் விதம் பாலசந்தருக்கே உரியது... இந்த கதாப்பாத்திரம் தான் சிறந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மையோடும், அவசியத்தோடும் உருவாக்கப்பட்டிருப்பதும் அழகு.. மேடை நாடக உணர்வை கொண்டுவந்தாலும் அந்த காலகட்டத்திற்கு இது ஒன்றும் தவறல்ல.. ஒண்டிக்குடித்தனம் என்றாலே சலசலப்பிற்கு கேட்கவா வேண்டும்.. அதிலும் அங்கு ஒரு மடிசார் மாமி இருந்தால் .. கேட்கனுமா என்ன? அதிலும் இந்த மாமி ஒரு சினிமா பைத்தியம் தான் பார்த்த சினிமா கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசுவதே இவரது வேலை.. மாமியின் வர்ணிப்பு போதும் கதைக்கு போடா என்று நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது... இதோ கதைக்குள் நுழைவோம்.. கதை ஒரு அனாதையை சுற்றி... அவனை சுற்றியிருக்கும் மக்கள் அவனை எவ்வளவு உபயோகப்படுத்தி கொள்கிறார்கள் என்பதே கதை.. அதுவும் எப்படி? அவன் ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாய காதல் புரியும் வரை .. பாலசந்தரால் தானய்யா இப்படி கையாள முடியும்.. நடுத்தரவர்க்கத்திற்கே உரிய போட்டி, பொறாமை,ஹிபோக்ரஸி இந்த இயல்புகளை கதையாக கதையின் பாத்திரங்களாக்க நம்மவரால் தான் முடியும் மொத்த படமும் ஒண்டுகுடித்தனத்திலேயே படமாக்கப்பட்டிருப்பதும் இந்த கருத்தை வலியுறுத்தத்தான்..இந்த ஒண்டுகுடித்தனத்தில் வாழ்பவர்கள் சுய நலவாதியாகவும், நண்பர்களாகவும், தம்மை பற்றி கவலைப்படுபவர்களாகவும்,அப்பாவியாகவும்,எதையும் கண்டுகொள்ளாதவர்களாகவும், மற்றவர்கள் இவர்களை உரிஞ்சுவது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாகவும் இந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அழகாக புட்டு புட்டு வைத்திருப்பார் இயக்குனர் சிகரம்.. இந்த மனிதர்கள் எல்லாம் ஒரு கூறையின் கீழ் வாழ்ந்துகொண்டு, தங்களின் அன்றாட கவலைகளை சொல்லிக்கொண்டும், தங்கள் செயல்களினால் பின்னிய வலையிலே(கூட்டில்)வாழ்ந்து கொண்டுடிருக்கும் இவர்களின் குறிக்கோள் எல்லாமே பணத்தை நோக்கியே.. பணம் பணம் மேலும் பணம்... இந்த மனிதர்களை நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரிடமும் அடையாளம் கண்டு கொள்ளலாம், அவ்வளவும் ஏன் நம்மிடமே கண்டு கொள்ளலாம் அது தான் யதார்த்தம் அது தான் பாலசந்தர்... இப்படி எல்லோராலும் உதாசீனப்படுத்தபட்டாலும் ஒன்று இரண்டு நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் ஆம் மாதுவிற்கும் அப்படி ஆறுதல் சொல்ல இருவர் இருந்தனர் இந்த வீட்டில்.. மலையாள சேட்டன் முத்துராமனும், காம்பவுண்டின் பெரியவர் மேஜர் சுந்தரராஜனும். இருவரும் மாதுவின் நலம் நாடுபவர்கள். ஒரு பக்கம் மேஜர்- அவர் மனைவி சிவகாமி, இன்னொரு பக்கம் எஸ்.என்.லட்சுமி- அவரது கணவர். பக்கத்தில் பட்டு மாமி - கிட்டு மாமா (செளகார் ஜானகியும் ஸ்ரீகாந்த் கூடவே ஒரு இணைப்பு ஆம் ஒரு குழந்தையும்) மாடியில் மனோரமா, அவரது அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசு, முத்துராமனும் மாடியில் ஒரு அறையில் மற்றும் டைப்பிஸ்ட் கோபு, காத்தாடி ராமமூர்த்தி என ஒரு பட்டாளமே இருக்கும் இந்த ஒண்டிக்குடித்தனத்தில்.. இதன் நடுவே ஜெயந்தி வரும் காட்சி .. அப்பப்பா .. ஜெயந்தி பெங்களூரில் படிப்பதாக சொல்கிறார் அவரது அம்மா எஸ்.என்.லெட்சுமி .. அவள் வந்த உடன் ஸ்ரீகாந்த ஊத செளகார் தூபம் போட ஜெயந்தி பெங்களூரில் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரியவருகிறது. உடனே மற்றவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டுமே.. ஜெயந்தியை பைத்தியம் என்று சொல்வதும் பயந்துகொண்டு யாரும் அவரிடம் பேசாமல் இருப்பதும்... .. இப்படி எல்லோராலும் புறக்கனிக்கப்பட்ட இரண்டு உள்ளங்கள் ஒன்றை ஒன்று நேசிக்க தொடங்குகின்றன.ஆம் ஜெயந்தியும் நாகேஷ�ம் காதலிக்க தொடங்குகிறார்கள் ஆம் கட்டாய காதல் தான் .. ஜெயந்தியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை இவர் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரிந்ததால் ஓடிவிட எஸ்.என்.லெட்சுமி ஜெயந்தியை மாதுவின் தலையில் கட்ட நினைக்க . மாதுவோ தானாக வலையில் விழ.. இரு உள்ளங்களும் காதல் உலகத்தில் சஞ்சரிக்க தொடங்குகின்றன.. இதற்கிடையில் மாதுவின் படிப்புத் திறமையை கண்டு ஒரு பெரும் பணக்காரர் இவரை தத்து எடுக்க போவதாக சொல்ல மற்றவர்கள் மாதுவை கவனிப்பதை பார்க்க இரு கண்கள் போதாது. அவ்வளவு கவனிப்பு பிளாஸ்க், கடிகாரம், டேபிள் பேன் என அமர்க்கள படுகிறது.. கூடுதலாக மாதுவின் கல்லூரி முதல்வர் தன் மகளை மாதுவிற்கு திருமணம் செய்து கொடுக்க முன்வருகிறார். இதையெல்லாம் மாது ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதே கதை.. மாதுவின் மனம் குழந்தையை போன்றது .. இதையெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு பாரு(ஜெயந்தி)வுடன் இணைகிறார்.. மாதுவேடத்திற்கு நாகேஷ் தவிர யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. பிறவிக்கலைஞனய்யா எங்கள் குண்டுராவ்.. ஜெயந்தி .. எவ்வளவு அழகான இயல்பான வெளிப்பாடு .. ஒரு சின்ன தவறான பேச்சைக்கூட தாங்கி கொள்ள முடியாத குணம் மேலும் மன நிலை மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்ததால் இவரை மற்றவர்களும் சரி பெற்றவர்களும் சரி .. புண்படுத்த இவர் நாகேஷின் வெகுளித்தனத்தில் அடைக்கலம் பெருகிறார்.. சமுதாயத்தால்/சமூகத்தால் ஒதுக்கப்பட்ட/வஞ்சிக்கப்பட்ட இரு உள்ளங்கள் காதலால் இணைகின்றன.. செளகார் ஜானகி .. பாலசந்தரின் படங்களில் கட்டாய இடம் இவருக்கு .. பாமா விஜயத்தில் காமெடி கலந்த பாத்திரம் என்றாலும் இதில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பாத்திரம் வெளுத்து வாங்கினார் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தை ... பேஷ் மேடம்... பட்டு மாமியாகவே மாறிவிட்டார் கிட்டு மாமா வேடத்தில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ரீகாந்த் .. கன கச்சிதம்.. இவர்களுக்கு இணையாக எஸ்.என்.லெட்சுமி .. எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். தன் மகள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருப்பது எல்லோருக்கும் தெரிய வரும் சமயத்திலும் சரி, ஜெயந்தியிடம் முகத்தை கடு கடுவென வைத்துக்கொண்டு பொரிந்து தள்ளுவதிலும் சரி, மாதுவிடம் டேய் சோறு போட்டவடா .... மறந்திடாதாடா..என .. சொல்லும் காட்சியிலும் இவர் நடிகையர் திலகம் என்றால் அது மிகையில்லை... பாலசந்தருக்குள் இருக்கும் அந்த ஜீனியஸ்/படைப்பாளியால் இப்படி நடுத்தர வர்கத்தினரின் போலி கவுரவத்தையும் அவர்களின் பண வெறியையும் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பார் திரைக்கதையில்.. மனிதர் எங்கோ பிறந்திருக்க வேண்டியவரய்யா. முகத்தையே காட்டாமலும் சில கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தவர் எங்கள் பாலசந்தர். ஆம் இருமல் தாத்தா .. இங்கே மீண்டும் வி.குமார்-வாலி- பாலசந்தர் கூட்டணி தொடர்கிறது.. பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல் , பிராமண பாஷை பாடல்களின் முன்னோடி ஆம் எந்த பாடல் பற்றி சொல்கிறேன் என்று தெரிந்திருக்குமே.. அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா என செளகாரும் - ஸ்ரீகாந்தும் பாடும் பாடல் இன்றும் பிரபலமான பாடல் வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாம்மாவும், செளந்தரராஜன் ஐயாவும் பாடும் அழகும், குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்... சுசீலா: ஏன்னா, நீங்க சமர்த்தா? நீங்க அசடா? சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம் அசடா இருந்தா பறிப்பேளாம் டி.எம்.எஸ்: ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து? சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா? அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவையா வாங்கிக்கறா பட்டு பொடவையா வாங்கிக்கறா அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி..பட்டு அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி? பட்டு புடவைக்கு ஏதடி? அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? சுசீலா: உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக் கண்டா பட்டு? உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக் கண்டா பட்டு? டி.எம்.எஸ்: பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு சுசீலா: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு? நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு? எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு டி.எம்.எஸ்: சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு? சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு? சுசீலா: எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு சுசீலா: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு? டி.எம்.எஸ்: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு சுசீலா: என்னத்தை செய்வேள்? டி.எம்.எஸ்:சொன்னத்தை செய்வேன் சுசீலா: வேறென்ன செய்வேள்? டி.எம்.எஸ்: அடக்கி வெப்பேன் சுசீலா: அதுக்கும் மேலே? டி.எம்.எஸ்: ம்ம்ம் பல்லை உடைப்பேன் சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி? பாடல் இதோ அடுத்தது ..காதலர்களின் கனவு.. தாமரை கன்னங்கள் தேன் மலர் கின்னங்கள் அழகான கற்பனை வாலியின் உபயம். பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களின் மற்றுமொரு மயக்கும் டூயட் ஆலிலை மேலொரு கண்ணனை போலிங்கு வந்தவனோ .. வாலி வாலிதானய்யா.. சுசீலா: ஆஆஆஆ ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம் சுசீலா: ஆஆஆஆ ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ரீனிவாஸ்: தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும் போது பொங்கிடும் எண்ணங்கள் சுசீலா: மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் மாலையில் சந்தித்தேன் ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ சுசீலா: ஆஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ சுசீலா: ஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ சுசீலா: ஆஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ சுசீலா: ஆஆ சுசீலா: துயில் கொண்ட வேளையிலே குளிர் கொண்ட மேனியிலே துணை வந்து சேரும் போது சொல்லவோ இன்பங்கள் மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் சுசீலா: ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ ஸ்ரீனிவாஸ்: சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும் போது உறங்குமோ உன்னழகு தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும் போது பொங்கிடும் எண்ணங்கள் சுசீலா: மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் மாது பெரும் பணக்காரன் என்று தெரிந்ததும் ஒரே களேபரம்.. பாடல் பிறக்கிறது.. முத்துராமன்(எஸ்.சி.கிருஷ்ணன்) ஆரம்பிப்பதால் சேதி கேட்டோ என மலையாள வாசம் நடுவில் மூன்று பெண்களும் போடும் போட்டி (அஷ்டலெட்சுமியும் என சுசீலா, ஜமுனாராணி மற்றும் ஸ்வர்ணா(குமாரின் மனைவி)) படு தமாஷ்.. கிருஷ்ணன்: சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி ஹா ...சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? சுசீலா: அஷ்டலஷ்மியும் நவ நிதியும் இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா அஷ்டலஷ்மியும் நவ நிதியும் இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா அன்ன பூரணி என்னைப் பாரு நீ அன்ன பூரணி என்னைப் பாரு நீ கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா ..அய்யா .. அய்யா....அய்யய்யா கிருஷ்ணன்: எந்தா, சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி ஜமுனா: நேத்து வரை நெனச்சதெல்லாம் மாறிப் போச்சு நான் பார்த்த முகம் பள பளப்பும் ஏறிப் போச்சு ஆஹா .. நேத்து வரை நெனச்சதெல்லாம் மாறிப் போச்சு நான் பார்த்த முகம் பள பளப்பும் ஏறிப் போச்சு கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி அந்தக் கொடி பறக்குற இடத்துலே தான் குடி இருக்குதடி மனசு குடி இருக்குதடி ஸ்வர்ணா: வாது சூது தெரியாத மாது கண்ணா இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா வாது சூது தெரியாத மாது கண்ணா இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா இதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா கிருஷ்ணன்: ஹா, சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி டைட்டில் பாட்டு -வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் .. முதலில் டி.எம்.எஸ் பாடுவதாக இருந்த பாட்டு அவர் மெட்டு சரியில்லை என்று கூற பாலசந்தரோ மெட்டு இது தான் பாடுபவர் வேறு ஒருவர் என்று கூரியதால் சீர்காழியார் பாடினார். என்ன அருமையான வரிகள் .. வாலி ஐயாவின் நம்பிக்கையூட்டும் வரிகள். பாடல் பிரபலமடைந்தது .. அப்போதைய முதல்வர் திரு அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டி ரசித்த படம் இது என்பது செய்தி.. எதிர் நீச்சல் .. இன்று பார்த்தாலும் புதுசாகவே இருக்கும் .. சலிப்பே வராது..அது தான் பாலசந்தர் பாலசந்தரின் அடுத்த படத்துடன் விரைவில்-ராஜேஷ்

No comments:

Post a Comment