Tuesday, January 11, 2022

பாலச்சந்தர்-9 இரு கோடுகள்

9. இரு கோடுகள் FILE of a LIFE
கே.பியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்றால் அது இரு கோடுகள். கலாகேந்திராவின் தயாரிப்பில் ஜெமினி,செளகார் ஜானகி,ஜெயந்தி,வி.எஸ்.ராகவன், சகஸ்ரநாமம், எஸ்.என்.லெட்சுமி, நாகேஷ், சச்சு மற்றும் மாஸ்டர் பிரபாகர் நடித்திருந்தனர். கோபினாத் என்ற ஜெமினி தான் காசியில் தங்கியிருந்த வீட்டின் எஜமானரின் பெண்ணான செளகாரை காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். திடீரென்று உடம்பு சரியில்லாமல் போன ஜெமினியை பார்க்க வரும் அவரது பெற்றோர்கள் அவரை கையோடு சென்னைக்கு கூட்டிப்போக திரும்பி வருவார் என காத்திருக்கும் செளகாருக்கோ ஏமாற்றம். அதே சமயம் அவர் குழந்தைக்கு தாயாகப்போகும் செய்தியைக்கேட்டு கோபம் கொள்ளும் தந்தை வி.எஸ்.ராகவனை அத்தை எஸ்.என்.லெட்சுமி தேற்றுகிறார். பெண்ணை நன்கு படிக்கவைத்து கலெக்டராக்குவதாக தந்தை சபதம் செய்கிறார். இதற்கிடையே ஜெமினிக்கு வீட்டில் பெண்பார்த்து கல்யாண்மும் முடிந்துவிட தனக்கு செளகாருடன் கல்யாணம் முடிந்ததை மறைத்து ஜெயந்தியுடன் திருமணம்செய்து 3 குழந்தைகளுடன் இனிதே வாழ்க்கை நடத்துகிறார். வாழ்கையில் புயல் இல்லாமல் எப்படி .. கவர்மெண்ட் உத்தியோகத்தில் அதாவது கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கும் இடத்திற்கு புதிய கலெக்டராக செளகாரே வர அமைதியாக இருந்த ஜெமினியின் வாழ்கையில் புயல் வீச தொடங்குகிறது. இத்தனை வருடங்களாக யாரைப்பார்க்க தவம் கிடந்தாளோ அவனைப்பார்த்து சந்தோஷம் அடைந்தாலும் வேலை இடத்தில் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தனியாக அவனைக்கூப்பிட்டு அவன் காலில் விழுந்து தன் கதையை சொல்ல அவன் பங்குக்கு அவனும் தன் நிலையை கூறுகிறான்.. இப்படியாக தனக்கு ஒரு மகன் இருப்பது தெரியவர அவனைப்பார்க்க திருடன் போல் கலெக்டரின் வீட்டுக்கு வர வி.எஸ்.ராகவனுடன் சந்திப்பு ஏற்பட ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் ராகவன் தன் மகளிடமே சம்பளம் வாங்கும் வேலையில் உள்ள ஜெமினியை குத்திக்காட்ட இன்னும் அவனை பழி வாங்க அலுவலகத்தில் உள்ள ஆட்களை கையில் போட்டுக்கொண்டு ஜெமினிக்கு திருட்டுப்பட்டம் கட்டுகிறார். அடிக்கடி ஜெமினியும் செளகாரும் சந்தித்தால் அலுவலகத்தில் புகை கிளம்பத்தானே செய்யும். அப்படித்தான் நாகேஷும் வதந்தியை கிளப்பிவிடுகிறார். வீட்டிலும் புகைச்சல் ஆரம்பம். இரு பெண்களும் சந்தித்து கொள்கிறார்கள் . ஒரு சமயம் அலுவலக மியூசிகல் சேர் போட்டியில், இன்னொரு சமயம் செளகார் தன் வீட்டு கொலுவிற்கு ஜெயந்தியை அழக்க வரும்போது .. இப்படி பல திருப்பங்களுடன் கதை முடிவடைகிற்து. செளகார் வெளி நாடு செல்வது போல் படம் முடியும். கதை என்னமோ இரண்டு மனைவி கதை ஆனால் அதை பாலச்சந்தர் சொன்ன விதம் கையாண்ட சூழல்கள் .. பளிச் பளிச் என வசனங்கள் அதுவும் அந்த லைப் பைல் வார்த்தை விளையாட்டு. அப்பாவி கணவனாக ஜெமினி கன கச்சிதம், கலெக்டராக செளகார் மிக பொருத்தம். பாசமும் கருணையும் அப்பாவித்தனத்துடன் ஜெயந்தி.. மிகவும் அருமையான பாத்திரம் அவருடையது. கோபக்கார அப்பாவாக வி.எஸ்.ராகவன், பாசமிகு அப்பாவாக சகஸ்ரநாமம் .. இருவருமே நல்ல நடிகர்கள் . இசை ஆஸ்தான வி.குமார் – வாலி கூட்டணி. எல்லா பாடல்களுமே அருமை அருமை. அலுவலக விழாப்பாடலான நானொரு குமாஸ்தா நவராத்திரி பாடலான புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் .. இதைப்பற்றி வாலி ஐயாவின் நினைவலகள் பகுதியில் விரிவாக எழுதுவேன். பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே . மூன்று பாடல்களும் பிரமாதம். மூன்று முக்கிய பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டத்தையும் கண் முன் கொண்டு வந்திருப்பார். வாழ்கையில் சிறிய கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போட்டால் என்ன ஆகும் அது மாதிரி வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லியிருப்பார். இதை கன்னடத்தில் அவரே இரடு ரேககளு, ஹிந்தியில் சஞ்சோக், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என எல்லா மொழியிலும் இந்த படம் வந்தது. இதில் ஒரே ஒரு நெருடல் பாரதி வேடமெல்லாம் போட்டு வெளுத்து வாங்கும் நாகேஷ் நிஜத்தில் வம்பு பேசுவதும், பையனை கூடையில் வைத்து அலுவலகத்து வருவதும் என சொல்வது கொஞ்சம் நெருடல் மொத்தத்தில் இரு கோடுகள் பாலச்சந்த்ரின் மற்றொரு அருமையான படைப்பு. அடுத்த படத்துடன் விரைவில்-ராஜேஷ்(@rajesh venkatasubramanian)

No comments:

Post a Comment