Saturday, July 10, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 12
ப்ளேபாய்(playboy) கதாப்பாத்திரங்கள் தமிழ்த்திரையில் நிறைய உண்டு
அந்த கதாப்பாத்திரங்களுக்கான தீம் இசை(theme music) பல படங்களில் பலரும் செய்துள்ளனர்.
ஆனால் ஒரு ப்ளேபாய் கதாப்பாத்திரம் எப்படி வலை விரிக்கிறான். அவள் எப்படி சிக்குகிறாள் என்பதை பொறி வைத்து எலியை பிடிப்பதுபோல் ஆங்கிலத்தில் ட்ராப்(TRAP) என்பார்களே
அதையும் இசையில் காண்பிக்க முடியும் என நிரூபித்தவர் மெல்லிசை மா மன்னர் ..
ஏற்கனவே போலீஸ்காரன் மகள் திரையில் 3 பெண்களை மயக்கும் ப்ளேபாய் கதாப்பத்திரம் பாடுவதாய் வந்த “ஆண்டொன்று போனால்” பாடலில் 3 பெண்களையும் 3 வெவ்வேறு இடத்தில் பார்ப்பதால்
அந்தந்த இடத்திற்கும் சூழலுக்கும் இசையால் காட்சியை விளக்கியிருந்தாலும் இந்த பாடலில் ஒரு பெண்ணை கண் வைத்துவிட்டான் அவளை எப்படி தன் வலையில் சிக்க வைக்கிறான் அவளும் எப்படி விழுகிறாள் எல்லாமே ஒரு பாடலில்
சாத்தியமா .. இதோ சாத்தியம் என்கிறார் மெல்லிசை மாமன்னார்.. அவர் கைவசம் தான் இரண்டு கருவிகள் உள்ளனவே ஒன்று கவியரசர் கண்ணதாசன் இன்னொன்று சுசீலாம்மா .. இந்த கருவிகள் தான் அவர் நினைத்ததை எல்லாம் செய்ய வல்லவையாயிற்றே
இதோ இங்கே ஒருத்தி நீராடுகிறாள் எங்கேயாம்.. குற்றாலத்தில் அதுவும் எப்படியாம்.. தென்றலில் அவளது ஆடை பின்ன தேன்வருவி அவள் உடலை நனைத்து அது மின்ன .. ஆஹா கவியரசரின் சொல்லாடலை என்ன சொல்ல
ஆரம்பத்தில் அருவி என்றவுடன் வரும் சிதாரோ மாண்டலினோ அப்பப்பா கே.ஆர்.வியின் மேல் மட்டுமா நீர் தெளிக்கிறது நம் மீதும் தான்.. என்ன இசை...
அவள் குற்றாலத்தில் தேனருவியில் குளித்துக்கொண்டிருந்தாளாம் அதை அவ்வளவு அழகாக பல்லவியில் கவியரசர் கொண்டுவர . குழலோ குரலோ என கேட்கும்விதமாய் சுசீலாம்மா மட்டுமே பாட முடிந்த பாடல் இது.
பல்லவியில் வரும் தென்றலில் ஆடை பின்ன ஒரு தடவை மட்டுமே மீண்டும் பாடப்படும் காரணம் .அவள் தனக்கு நடந்ததை விவரிக்கிறாள். பின் அவன் எப்படி வலை விரித்தான் தான் எப்படி விழுந்தேன் என்று சொல்லும் விதமாக போவதால்
மீண்டும் மீண்டும் தேனருவியில் நனைய தேவையில்லை .. என்ன கற்பனை . இயக்குனர் பி.மாதவன் என்ற அருமையான கலைஞரையும் சொல்ல வேண்டும்.. மிகவும் நேர்த்தியான இயக்குனர். காட்சியமைப்பில் கெட்டிக்காரர் . அது இதிலும் நிரூபித்திருப்பார்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
அப்படி அவள் நீராடுகையில் நீர் தன் உடைகளை நனைக்க அதை சரி செய்யும் போது பெண்ணுக்கே உண்டான அந்த புத்தி கூர்மை வெளிப்பட யாரோ தன்னை பார்ப்பது அவளுக்கு புலப்படுகிறதாம்..
பாராத விழியிரண்டு பார்ப்பதை அவள் அறிந்தாளாம் .. அந்த கோலத்தில் இருப்பதை மறந்து வெட்கம் மேலோங்கியதாம்..
அப்பப்பா இந்த பாடலை எத்தனை தடவை பார்த்திருப்பேன் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொருமுறையும் வியப்பு மட்டுமே மேலிடும்.. இசை கேட்கவே வேண்டாம்
அதுவும் அந்த இரண்டாவது முறையாக தென்றலில் ஆடை பின்ன என சுசீலாம்மா பாடுவது அவனை கண்ட அந்த அச்சம் பயம் நாணம் என எல்லாம் அந்த குரலில் தெரியும் ..
பாலாடை பளபளக்க
மேலாடை சாய்த்து எடுத்தேன்
பாலாடை பளபளக்க
மேலாடை சாய்த்து எடுத்தேன்
பாராத விழியிரண்டு
பார்ப்பதை நான் அறிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
கோவில் மணியோடு வரும் இடையிசை ... குளித்து முடித்து கோவிலுக்கு செல்லும் வழக்கம் அவளுக்கு. அங்கேயும் அதே விழிகள் தொடர்கிறதாம்.. இதில் நேரத்தை நான் மறந்தேன் என்று ஒரு வரி போட்டிருப்பார்
கவியரசர் .. அப்படி என்றால் என்ன .. குளித்து முடித்து பக்தியுடன் கோவிலுக்கு வந்திருக்கும் அவளுக்கு அதே விழிகளை பார்த்ததும் பகல் இரவு காலை மாலை என நேரம் மறந்துவிட்டதாம் .. எப்படி இருக்கு பாருங்கள்
இன்றைய பெண்ணாக இருந்தால் இந்நேரம் அவன் லாக்கப்பில் இருந்திருப்பான் ஹி ஹி சரி சரி
ஆனைமுகன் கோவிலிலே
அந்தி படும் வேளையிலே
ஆனைமுகன் கோவிலிலே
அந்தி படும் வேளையிலே
கன்னி வலம் சுற்றி வந்தேன்
கண்ணிரண்டை அங்கும் கண்டேன்
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலை குனிந்தேன்
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலை குனிந்தேன்…
கோவில் முடித்து வழியில் கடைத்தெருவில் வளையல் கடையில் வளையல்கள் பார்த்துக்கொண்இருந்த வேளையில் அதே விழிகள் தொடர்ந்தனவாம். இம்முறை தைரியமாக கையை தொடவும் செய்தானாம் ..
ட்ராப் என்று சொன்னேனே அதை இசையில் உணர்த்துவார் மெல்லிசை மாமன்னர்.. இந்த சரணத்தில் வெஸ்டர்ன் இசை கொடுப்பார் பாருங்கள் அவன் வேகமாக முன்னேறுகிறான்.. அவள் மீது கண் வைத்து தொடர்ந்து இப்பொழுது
அடுத்து என்ன செய்யப்போகிறான் என்ற எதிர்ப்பார்ப்பை அந்த இசை கொடுக்கும்
பாடல் முழுக்க MONTAGE வடிவில் தான். அதனால் குரலுக்கு கூடுதல் வேலை.. சுசீலாம்மாவின் அசுரப்பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. அந்த அம்மம்மா மெய் சிலிர்த்தேன் என்று சொல்லும் இடம் போதும்.. இசைப்பேரரசியின்
குரல் செய்யும் ஜாலத்தை பற்றி என்ன சொன்ன .. கண்ணன் செய்யும் ஜாலத்தை பற்றி போய் சொல்ல யசோதை இருந்தாள் இங்கு நம் இசைப்பேரரசியின் குரல் செய்யும் ஜாலத்தை அந்த கலைமகளிடம் தான் சொல்ல வேண்டும்
அது குரல் இல்லை .. குழல் தேன்குழல்
அச்சத்தால் தலை குனிந்தேன் என்ற இடத்தில் படம் பிடித்த விதமும் அருமை. இரண்டு வளையல்களுக்குல் இருவரது முகமும் காண்பிப்பது அபாரம்.
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
என்னோடு கையிரண்டு
இணைவதை நான் அறிந்தேன்
அம்மம்மா மெய்சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
அம்மம்மா மெய்சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
அவன் தொடர்ந்தான் தொட்டான். இவளும் விழுந்தாள் .. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா என்று வாலி சொன்னது போல் இவளும் மெல்ல மெல்ல அவன்பால் ஈர்க்கப்படுகிறாள்
அந்த உணர்வை அவள் கையில் பூக்கள் கொண்டு கோவில் படியிறங்கி வரும் அந்த அழகிலேயும் அந்த இசையிலும் சொல்லியிருப்பது ஆஹா ஆஹா ..
அவள் கொட்டிய பூ கால் தேடி போயிற்றாம் .. அவனது கண்ணை நேருக்கு நேராக பார்த்து இவள் தலை குனிந்தாளாம்.. இந்த இடத்தில் சுசீலாம்மாவின் குரல் காதல் உணர்வால் தவிக்கும். கே.ஆர்.வி ஒன்றும் செய்யவேண்டியதில்லை
சுசீலாம்மா பாடியிருப்பதுபோல் முகபாவம் கொடுத்தால் போதும்
கை நிறைய பூ எடுத்து
காற்றுப் போல் நடந்து வந்தேன்
கை நழுவிப் பூ விழுந்து
கால் தேடி போக கண்டேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்து தலை குனிந்தேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்து தலை குனிந்தேன்
இப்பொழுது இருவரும் பார்வையாலேயே பேசிக்கொண்டு அவளும் அவன்பால் ஈர்க்கப்பட்டுவிட பின் என்ன அவன் நினைத்ததை முடிப்பவனாயிற்றே .. அவள் தன்னையே கொடுக்கிறாள் அவனிடம் மயங்கி
இந்த பாவத்தை விரசம் இல்லாமல் பாட ஒருவரால் மட்டுமே முடியும் அது இசையரசியால் மட்டுமே முடியும்
காந்தர்வ விவாகம் என்பதாக இருவரும் வரும் காட்சி அந்த ராத்திரியின் சூழலை இசையில் கொடுக்கும் ..
அந்த மேகம் மறைத்த நிலா என சுசீலாம்மா உச்சஸ்தாயில் பாடுவது நிலாவையே கிழித்துக்கொண்டு போகும் கத்தி போல் .. என்ன இனிமை என்ன குளுமை என்ன பாவம் ... அவன் விரித்த வலையில் விழுந்து அவளைப்பொருத்த
மட்டில் அது ஆனந்தமான இரவு அந்த உணர்வின் வெளிப்பாடாய் அந்த மேகம் மறைந்த நிலா நீட்டிப்பு .. போங்கப்பா மெல்லிசை மன்னரையும் இசையரசியையும் கவியரசரையும் பாராட்டி பாராட்டி விரல்கள் வலிக்கின்றன
இருள் சூழ என்பதையும் அவள் வாழ்வின் ஒளி மறையப்போகிறது என்பதையும் கவிஞர் சொல்லாமல் சொல்வது சிறப்பு .. அந்த இருளில் எங்கிருந்தோ வரும் சிறு ஒளியின் வெளிச்சத்தில் அவள் அவனோடு இணைந்தாளாம் என்ன அழகான
கவிதையாக வடித்திருக்கிறார் கவியரசர் . தன் தேகம் மறந்தாளாம்.. தன் தெய்வத்தோடு இணைந்தாளாம்.. அதற்குள் அவன் அவளது தெய்வமாகிவிட்டானாம் .. அது தான் அவன் திறமை இவள் அறியாமை .. அவள் வாழ்க்கையையே புரட்டிப்போடப்போவதும் அது தான் என்பது
அவளுக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை
மேகம் மறைத்த நிலா
மேகம் மறைத்த நிலா
விளக்கொளி ஏதுமில்லை
மோதும் சிறு ஒளியில்
முகத்தில் முகம் இணைத்தேன்
தேகம் மறந்துவிட்டேன்
தெய்வத்தில் நான் இணைந்தேன்
தேகம் மறந்துவிட்டேன்
தெய்வத்தில் நான் இணைந்தேன்
நான் சொன்னது போல் ட்ராப்க்கான பாடலிது .. மெல்ல மெல்ல அவனது வலையில் அவள் விழுந்து அவனோடு இணைவதை ஒரு கதை கவிதை போல் பாடலில் வடிக்க முடியும் என நிரூபித்தவர் மெல்லிசை மாமன்னர்
அதை விரலால் நிரூபித்தவர் கவியரசர், குரலால் மெருகேற்றியது நம் இசையரசி சுசீலாம்மா..
என்ன சொல்ல இதெல்லாம் தெய்வீகம் அமானுஷ்யம் .. நம் அறிவிற்கு எட்டாத ஒன்று ..
கண்ணே பாப்பா திரையில் ஒலித்த இந்த பாடலை அமானுஷ்யம் என்று சொல்வதில் வியப்பேதுமில்லை
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Monday, March 15, 2021
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 11
கர்நாடக மெட்டுகள் நிறைந்திருந்த காலகட்டம் அது. அங்கொன்றும் இங்கொன்றும் நாட்டுப்புற மெட்டுக்களோ இல்லை மேல் நாட்டு இசை என சொல்லப்படும் WESTERN music ஒலித்த காலம் அப்படியே ஒலித்தாலும் ஒன்று நகைச்சுவை
பாடலிலோ இல்லை நடன மங்கையோ இல்லை vamp பாத்திரங்கள் ஆடும்படி இருக்கும். நாயக நாயகியர் காதல் எல்லாம் பொதுவாக நல்ல கர்நாடக மெட்டிலோ, இல்லை பாரம்பரிய கருவிகளோ பயன்படுத்தி பாடல்கள் இருக்கும்
அந்த காலகட்டத்தில் இன்று உள்ளது போல் உலகமே கையில் இல்லை. மேல் நாட்டு இசையைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகம், ஆங்கில பத்திரிக்கைகள், இசை சம்பந்தப்பட்ட நூல்கள் என்று தேடி தேடி படித்து அறிவையும்
இசையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் .. அறிந்து கொள்ள வேண்டும் .. அப்படிப்பட்ட சூழலில் மெல்லிசை மன்னர்கள் தாங்கள் நுழைந்த புதிதில் அந்நியப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில மெட்டுக்களை அன்றைய நிலைப்படி
கர் நாடக பாணியில் போட்டாலும் தங்களுக்கென்று தனி பாணியை, தனி அடையாளத்தை உருவாக்கி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பல வித்தியாசமான ஒலியமைப்புகள், மேற்கத்திய இசைக்கருவிகளின் பயன்பாடு/மேலை நாட்டின் இசை பாணியை புகுத்தி பல ஜாலங்களை தெளித்து கேட்பவர்களுக்கு அட இது புதுசா இருக்கே .. இது கேட்டிராத ஒலியாக இருக்கே என்ற பிரமிப்பை உண்டாக்கினர் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி . அவரது பியானோ மோகம் பற்றி நாம் சொல்வதை விட கவியரசர் சொன்னதே நம் நினைவுக்கு வரும். ரஷ்ய பயணத்தில் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் பியானோவில் கை வைத்தவுடன் எதையும் பார்க்காமல் இவர் வாசித்ததை பார்த்து அங்கு கூடியிருந்தவர்களே வியந்தார்களாம். இயக்குனர் ஸ்ரீதர் குறிப்பாக என்ன என்ன வார்த்தைகளோ பாடலில் ஸ்ரீகாந்த் பியானோ வாசிப்பதை போல் வரும் காட்சியில் மன்னரின் கையை காண்பித்தார் என்ற செய்தியும் உண்டு. எம்.எஸ்.வி டைம்ஸ் மன்னரின் பியானோ பாடல்களின் தொகுப்பையே வெளியிட்டனர். அப்படி பியானோ அவரை ஆட்கொண்டதில் ஒன்றும் வியப்பில்லை.
1954.. சினிமா பழமை மாறாமல் இருந்த காலகட்டம் .. இருந்தாலும் பல்வேறு ஜாம்பவான்களும் பல்வேறு இசையால் மக்களை மயக்கும் வண்ணம் இருந்தனர்
அதிலும் புதியவர்களான மெல்லிசை மன்னர்கள் மெல்ல மெல்ல தங்களின் நடையை ஒரு அடையாளமாக மாற்றிக்கொண்டிருந்தனர். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைய தொடங்கின . அப்படி ஒரு படம் தான் 1954’ல் வெளியான வைரமாலை.. நகைச்சுவை சித்திரமான இந்த படத்தில் இரட்டையர்கள் கொடுத்த மெட்டுக்கள் மக்களை பரவசப்படுத்தியது என்றால் அது மிகையில்லை .. குறிப்பாக இன்றைய எனது தெரிவான “கூவாமல் கூவும் கோகிலம்” பாடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
பியானோ பற்றி இவ்வளவு பேசியதும் இந்த பாடல் பற்றி சொல்லத்தான்.. பாடலின் துவக்கமே பியானோவும் பின் புல்லாங்குழலும் சேர்ந்து செய்யும் ஜாலங்களை வார்த்தையில் விவரிக்க முடியாது.
கர் நாடக பாடகி எம்.எல்.வி அதே பாணியில் பாடல்கள் பாடியிருந்தாலும் சுதர்சனம் மாஸ்டர், சி.ஆர் சுப்புராமன் போன்றோர்களுக்கு ஜனரஞ்சகமான பாடல்களும் பாடியுள்ளார்
இருந்தாலும் காதல் பாட்டில் அதுவும் இப்படி ஒரு மெட்டில் பாடவைத்த பெருமை இரட்டையர்களையே சாரும்.. உடன் பாடுபவர் முதல் பின்னணிப்பாடகரான திருச்சி லோகநாதன்
இந்த படத்தில் கனகசுரபி எழுதி இதே ஜோடிக்குரல் பாடிய வஞ்சமிதோ வாஞ்சையிதோ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கும் அழகான இசை ஆனால் இந்த பாடல் காதலர்கள்
உல்லாசமாய் பூங்காவில் பாடும் பாடலுக்கு மேற்கத்திய இசையை அழகாய் புகுத்தி அதுவும் பியானோவின் துவக்கம் பின் தொடரும் குயிலோசையை சொல்லும் குழலோசை என முதல் முகவரி இசையே அட என சொல்ல வைக்கும் தொடரும் எம்;எல்.வியின் அந்த ஹம்மிங் ஆஹா என்ன இதம் .. உடன் இணையும் லோகநாதன் குரலில் ஹம்மிங்
கவியரசரின் அழகான வரிகள் ..
தபலா தவழ தழுவ .. கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
மேற்கத்திய பாணியை தொட்டுக்காட்டி பின் நம் கருவிகளை அழகாக கோர்த்து கொடுப்பதில் மன்னருக்கு நிகர் மன்னர் தான்..
கவியரசர் அப்பொழுதே மன்னரை கவர்ந்திருப்பார் பின்னே கோகிலம் கோமளம் போன்ற வார்த்தைகளை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பது அழகு.
பெங்களூர் லால்பாக் கார்டனில் படமாக்கப்பட்ட பாடல் .. அழகு பத்மினியுடன் நாடக காவலர் மனோகர் அவர்கள் (என்ன அழகு மிடுக்கு)
பல்லவி ஒரு வகை என்றால் தொடரும் சரணம் முற்றிலும் வேறுபட்ட இசை ..
எம்.எல்.வியின் குரலில் தொடரும் இப்படி
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை பேதமில்லை
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமெ
என்னாளும் அழியாது என் ஜீவனே
அன்பு தேனோடும் நீரோடை நாமேவில் அந்த நா ......... மே .. அந்த சங்கதி எல்லாம் மன்னர் முத்திரை .. தபலா உருட்டல் தொடரும் பாடல் முழுவதும்
அடுத்து லோக நாதன் தொடருவார் இதுவும் வேறு இசை வேறு நடை
கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்த்தைகள் ஏனோ?
எம்.ல்.வி பதிலுரைப்பார் அதுவும் வேறு நடையில்
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
இப்படி ஆங்கிலத்தில் சொல்வது போல் cut & cut அதுபோல் நிறுத்தி நிறுத்தி .. வெட்டி வெட்டி மெட்டுக்களை இணைப்பது . அப்படி இங்கே மெட்டு இணையும் குரல்களும் இணையும்
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
தங்கள் வீட்டில் இருக்கும் நிலவரம் குறித்து இருவரும் சிரித்து பேசுவதாய் தொடரும் சரணமும் அதன் இசையும் அழகோ . இதுவும் வேறு நடை
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
மணமகள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
மெல்லிசை மன்னர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய பாடல் இது என்றால் அது மிகையில்லை ..என்ன ஒரு இசை, வரிகள், குரல் எல்லாம் இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் கூட்டுகிறதே அது ஏன்.. அது தான் மெல்லிசை மன்னர் ..
90’களில் தீபன் சக்ரவர்த்தி சில பழைய பாடல்களை டிஜிட்டல் வடிவம் கொடுத்து உலவும் தென்றல் என்ற பெயரில் தன் அப்பாவும், டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்களை மீண்டும் பாடினார் அப்படி அவர் இந்த பாடலை பாடியபோது எம்.எல்.வி பாடியதை இசையரசி பாடினார். அதுவும் இனிமை குளுமை ...
இந்த பாடல் அமானுஷ்யத்தில் இடம்பெற காரணம் அந்த மேற்கத்திய இசை பாணியை தைரியமாக காதல் பாடலில் புகுத்தி புதுமை செய்தததால் ....
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 10
கவ்வாலி என்பது சூபி எனப்படும் பாடல் வகையை சார்ந்தது.
பக்தி உணர்வுடன் பாடுவது இதன் தனித்துவம்..
கடவுளை நெருக்கமாக உணர்ந்து பாடுவதாக அமைந்தது.
பொதுவாக மகான்கள், ஆசான் போன்றவர்களை புகழ்ந்து பாடுவதாய் அமைந்தது இந்த வகை பாடல்கள்
கசல் வகையில் அமைந்த இந்த பாடல் வகை பொதுவாய் இஸ்லாமியனரே பாடி வந்தனர்.
இது 8’ம் நூற்றாண்டில் பெர்ஸிய நாட்டில் புழக்கத்தில் இருந்ததாகவும் 11’ம் நூற்றாண்டில் இந்தியா,துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளுகளிலும் பரவியது.
பொதுவாக உருது மொழியிலும் பின்னால் பஞ்சாபி மொழியிலும் பாடுவதாய் அமைந்தது மெல்ல மெல்ல பிராந்திய மொழிகளிலும் பாடப்பட்டது
அரசர்களின் காலத்தில் அரசவையில் பாடல், ஆடல் என எப்பொழுதும் கலைகளை வளர்த்தவிதமாய் இருந்தனர்.
ஒன்று போர்க்காலத்தின் பின் மன்னர்களுக்கும் மற்றவர்களுக்குமான பொழுதுபோக்கு அம்சாகவும்
அதே சமயம் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விதமாகவும் நாட்டியம், பாடல், கவிதை என அரசவையில் இருந்த காலங்கள் உண்டு
20’ம் நூற்றாண்டில் இது எல்லா நாடுகளிலும் பிரபலமடைந்தது. இதில் பெரும்பாலும் தபலா, டோலக், சாரங்கி போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டது. கைத்தட்டலும் சேர்ந்து அந்த இடத்தையே மெய் மறக்க செய்யும் ஒரு வித
Trance நிலையை அடைவது தான் இதன் நோக்கமாக இருந்தது.
முகலாய அரசர்களின் சபையில் பெரும்பாலும் இந்த கவ்வாலி வகையான பாடல்களும், அதையொட்டிய நடனமான முஜ்ரா போன்றவை பிரசித்தி பெற்றன..
பிற்காலத்தில் முஜ்ரா என்பது வேறு விதமாய் பயன்படுத்தப்பட்டது
பின்னர் கூட்டமான சபையில் ஒரு சிலர் பாடியும் பேசியும் கைத்தட்டலுடன் பாடும் பாணியை எல்லா மொழியிலும் ஆரம்பித்து பின் திரைப்படங்களிலும் அதை பலரும் கையாண்டிருக்கின்றனர்.
இந்த பாணி பாடல்கள் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் இடம்பெற்றன . அரசர்கள் சம்பந்தபட்ட படங்களிலும் சரி, பின் சமூக படங்களிலும் அது போன்ற சூழல்களை உருவாக்கி அது போன்ற பாடல்களை உருவாக்கினர்.
பிரபலமான ஹிந்தி கவ்வாலி பாடல்கள் என்றால் முகலே ஆசம் திரையில் ஒலித்த தேரி மெஹ்பில் மே(உந்தன் சபையில் எந்தன் விதியை), நா தோ காரவான் கி தலாஷ்(பர்ஸாத் கி ராத்), பர்தா ஹை பர்தா(அமர் அக்பர் அந்தோனி),
ஹை அகர் துஷ்மன்(ஹம் கிஸி ஸே கம் நஹின்)
க்வாஜா மேரே க்வாஜா - ஏ,ஆர்.ரகுமான் - ஜோதா அக்பர்
இன்னும் பல பாடல்களை சொல்லலாம் .
இவை எல்லாம் ஒரு வித சபையில், கூட்டத்தில், களிப்பிற்காக பாடும் பாடலாக அமைந்த பாடல்கள்
இது போல் கவ்வாலி பாடல்கள் தமிழிலும் அன்றைய காலம் முதல் வந்துள்ளன... அதெல்லாம் கூட சபையில் பாடுவதாக அமைந்தவை ..
உந்தன் சபையில் எந்தன் விதியை(சுசீலாம்மா, ஜிக்கி) அக்பர் இசை நெளஷாத்(முகலே ஆசாம் தமிழ் டப்பிங்)
நான் தமிழில் முதல் கவ்வாலி பாடல் வேதா அவர்கள் ஹிந்தியிலிருந்து கொண்டு வந்த “பாரடி கண்ணே என்று நினைத்திருந்தேன்”
பின்னர் தான் தெரிந்தது மெல்லிசை மன்னர்கள் 1957’ல் பத்தினி தெய்வம் திரையில் முஜ்ரா வகையில் “வேதாந்தம் பேசுவாங்க பாடலை “ அமைத்தனர்
ஆனால் ஆச்சர்யமான விஷயம் கைதிகளின் களைப்பு போக பாடும் பாடல் கவ்வாலியில் அமைத்தது தான் மெல்லிசை மன்னரின் திறமை.. ஒருவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
1959’ல் வெளியான ராஜா மலையசிம்மன் திரையில் கைதிகளை கப்பலில் மலேய நாட்டிற்கு கொண்டுபோவதாய் காட்சி. கைதிகள் எல்லோரும் கப்பலில் பல வேலைகள் செய்து பின் களைப்பு தீர
அவர்கள் பாடும் பாடலை கவ்வாலி பாணியில் அமைத்திருப்பார் மன்னர்
சீர்காழியார், பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜி.கே.வெங்கடேஷ் பாடும் குதூகலமான பாடல் ..
தபலா உருட்டலுடன் ஆரம்பிக்கும் தொகையறா
மாளிகையிலே வசிக்கும் மனிதர்கள் எல்லோரும் வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும்
இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே
கவ்வாலிக்கு உண்டான ஹார்மோனியம், நீண்ட ஆலாபணை , கைதட்டல் என குதூகலமாய் ஆரம்பிக்கும் பாடல்
அண்ணாத்தே...ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் இதுதான் கலிகாலம் இதுதான் கலிகாலம்
இந்த வரியையே மூவரும் மூன்று விதமாய் பாடி பின் சேர்ந்து பாடுவது அழகு ..
யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்
ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க
நமக்கு ஊளைச் சதையுமில்லே வைத்தியர் உதவியும் தேவையில்லே கூழைக் குடிச்சாலும் நம்ம குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே
அண்ணாத்தே....நாளை நடக்கும் நடப்பைப் பற்றி கவலை நமக்கில்லை கவலை நமக்கில்லை கவலை நமக்கில்லை
ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே அதனால் பயமில்லே
ஹார்மோனியமும் தபலாவும் விளையாடும்
கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும் தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும்
கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும் நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே கவலையற்று வாழுகிறோம்
கொசுவின் கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்
அண்ணாத்தே
கூரை நமக்கு ஆகாசந்தான் பஞ்சணை தரையேதான் – சீமான்கள் யாரும் என்றும் காணா இன்பம் உண்டு நமேக்கேதான்.....
மிகவும் அழகான ஒரு கவ்வாலி வகை பாடலை நாயகன் ரஞ்சனும்(என்ன மிடுக்கு என்ன கம்பீரம்) கைதிகளும் மாளிகை வாசிகளை கிண்டல் செய்து பாடும் விதமாய் அதுவ்ய்ன் 1959’ல் அமைந்தது புதுமையே
மருதகாசியின் அழகான வரிகளும் அதை பாடகர்கள் பாடியிருக்கும் விதமும்
இதெல்லாம் மன்னர் என்ற அந்த மகா புருஷருக்கு மட்டுமே சாத்தியம்
பாடல் காட்சியை பதிவேற்றம் செய்துள்ளேன்..
முழு பாடல் கிடைக்கவில்லை.
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 9
கிராமிய மனம் கமழும் பாடல்கள் அதாவது நாட்டுப்புற பாடல்கள் என்றால் உடனே ஒரு கூட்டம் என்னவோ கிராமிய மனத்தையே அவர் தான் கண்டுபிடித்த மாதிரி பொய்யான பிரச்சாரம் செய்து அவரின் வருகைக்கு பின்
தான் நாட்டுப்புற பாடல்களும் கிராமிய மனம் கமழும் இசையும் சினிமாவில் ஒலித்ததாய் சொல்லிக்கொண்டு அலையும் அறிவிலி கூட்டம் நிறையவே உள்ளது.
அவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் விதமாகவும் அவர்கள் கன்னத்தில்அறையும் விதமாகவும் தான் இந்த பதிவு.
மேதாவிகளே . ஜி.ராமனதான் காலத்திலேயே கிராமிய மனம் கமழும் பாடல்களை மிகவும் அழகாய் கொடுத்தார் .. சின்னக்குட்டி நாத்தனா துவங்கி பல பாடல்கள்
இருந்தாலும் கிராமிய மனம் கமழும் பாடல்களில் கொடிகட்டி இன்றும் மண்ணின் மனம் கமழும் இசை என்றால் அது திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்
மணப்பாறை மாடு கட்டி, சித்தாட கட்டிக்கிட்டு, மாமா மாமா, ஓடுகிற தண்ணியில, மண்ணுக்கு மரம் பாரமா , மாடுக்கார வேலா, இன்னும் பல பல
திஸ்ர நடையில் இவர்கள் உருவாக்கின மெட்டுக்கள் அதுவும் கிராமிய மனம் கமழும் பாடல்கள் ஏராளம் தாராளம்.
கிராமிய நடை என்றாலே அது மாமாவும் புகழேந்தியும் தான்.
இவர்கள் வரிசையில் மெல்லிசை மன்னரும்/ மன்னர்களும் தங்கள் பங்கிற்கு கிராமிய மனம் கமழும் பாடல்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்
இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படும் அடி என்னடி ராக்கம்மா . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எழுந்து ஆட வைக்கும் பாடல் .. மண்ணின் மனம் கமழும் பாடல்
மெல்லிசை மன்னரின் இசையும், கவியரசரின் வரிகளும் ஏழிசை வேந்தர் பாடிய விதமும் அதற்கு திரையில் நடிகர் திலகமும், ஜெயலலிதா, சுபா போட்ட ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது.
மன்னர் தான் எந்த வகை இசையையும் கொடுக்க வல்லவர் என நிரூபித்தவர். மேற்கத்திய பாணி அவருக்கு அல்வா என்றால் கிராமிய மனம் கமழும் இசையிலும் அவர் மெல்லிசை சக்ரவர்த்தி தான்.
எத்தனை எத்தனை கிராமிய மனம் கமழும் பாடல்கள் .. பாடல்கள் மட்டுமல்ல , மாட்டு வண்டி ஓட்டம், ரேக்ளா பந்தயம், கபடி, சிலம்பாட்டம் என கிராமிய மனம் கமழும் எத்தனையோ விளையாட்டுக்கள் மற்றும் பந்தயங்களுக்கும் அவர்
மிரட்டியிருக்கும் பின்னணி இசை இருட்டடிப்பு செய்யப்பட்டது என்ன காரணத்தினாலோ.. இன்றும் பின்னணி இசை என்றால் வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது ஆனால் தெய்வமகன், கர்ணன், ஞான ஒளி, உலகம் சுற்றும் வாலிபன்,
நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்
அப்படி ஒரு 5 1/2 நிமிடம் ஓடக்கூடிய ஒரு காட்சி.. மீனவ குப்பத்தின் பொங்கல் கொண்டாட்டம் அதற்கான கேலி கிண்டல், பின் குப்பங்களின் நடுவே படகு போட்டி .. இந்த 5 நிமிட காட்சியில் மெல்லிசை சக்ரவர்த்தியின் இசை ஆளுமையை
கண்டு வியப்பீர்கள். மனுஷன் மிரட்டியிருப்பார். பாட்டுக்கு ஒரு படகோட்டி .. பாட்டுக்கு மட்டுமல்ல .. பின்னணி இசைக்கும் தான் (தொட்டால் பூ மலரும் பாடலுக்கு முன் வரும் முன்னிசையை கேளுங்கள் நான் சொல்வது புரியும்)
முதலில் கொண்டாட்டத்திற்கும் பண்டிகைக்கும் உண்டான மங்கல இசையுடன் துவங்கும் காட்சி.. பெண்கள் கூட்டாக சுளகில் அரிசியை புடைத்து படைப்பது போலவும் , எஸ்.வி.ராம்தாஸ் முதலாளி நம்பியாரை வரவேற்று பொங்கல் பொங்குவதை
சொல்வதாகவும் துவங்கும் காட்சி, நம்பியார் ராம்தாஸின் குப்பம் தான் படகு போட்டியில் வெற்றி பெரும் என்று சொன்னவுடன்
போட்டி அறிவித்தல் போல் அந்த செண்டை மேளம் ஒலிக்க துவங்கும் பின் கோவில் மணியை சரோ ஒலிக்கவைக்க உடனே பெண்களின் நடனம் அப்பப்பா என்ன ஒரு இசை பின் நம்பியாரின் மனைவி ஜெயந்தி கோவில் மணியை அடிக்க
பெண்கள் எல்லோரு கடலை நோக்கி நடக்கும் அந்த காட்சியின் இசை அபாரம். தங்கள் வாழ்வின் ஆதாரமான அந்த கடல் தாய்க்கு பெண்கள் செய்யும் பூஜைக்கான இசை அழகோ அழகு
பூஜை செய்துவிட்டு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படகின் அருகே வர ஒவ்வொரு படகோட்டியும் நான் தயார் என்பது போல் சைகை காட்ட பெண்களின் நடனம்
சொடுக்கு இசை, செண்டை , இரு புறமும் பெண்களின் நடனம் நடுவே சரோவின் ஒய்யாரம், அந்த பக்கம் ஆண்கள் கூட்டத்தின் நடனம் என விழா மெல்ல மெல்ல கோலாகலம் அடைவதை இசையால் அறிவித்திருப்பார் மன்னர்
நடனம் மெல்லமாய் ஆரம்பித்து அப்படியே சூடுபிடிக்க அவருக்கும் ரொம்பவும் பிடித்த ஷெனாய் ஒலிக்க( நாகேஷ் வாசிப்பதாய்) அப்படியே கொண்டுபோய் சரோ அந்த மாறுவேட கிழவர் வடிவில் வந்திருப்பது தன் காதலன் எம்.ஜி,ஆர் என்பதை
அறிந்து கொள்ளும் அந்த நொடிக்கு கூட ஒரு இசை பின் நம்பியாருக்கு அது தெரியக்கூடாது என்பதாய் வரும் நடனமும் இசையும் அழகோ அழகு.. நம்பியாரை தடுக்கும் காட்சி பின் தொடரும் நடனமும் இசையும் என்ன சொல்வது..
கண்ணை இமைக்காமல் பார்க்க வைக்கும் . சும்மா அதிருதுல்ல என்ற வார்த்தை எல்லாம் அப்பவே வந்துவிட்டது இந்த இசையால் நடனத்தால்..
இவர்களின் இந்த இடைவிடா நடனத்தில் தன்னையும் அறியாமல் நம்பியாரும் சேர்ந்து கொள்ள ஒரே கும்மாளம் தான் கொண்டாட்டம் தான் பின் விசில் சத்ததுத்துடன் படகு போட்டி துவக்கம்
போட்டியின் முன் அறிவிப்பு தான் அந்த நடனமும் இசையும் .. என்ன ஒரு மிரட்டல்
விசிலை தொடர்ந்து போட்டிக்கு கொடிகாட்டி மணி அடிக்கும் இசையும் மிகவும் அழகாய் கேட்கும்.. கொடி அசைந்தவுடன் சீறும் சிங்கமாய்/ ஜல்லிக்கட்டு காளைகள் போல் படகுகள் கிளம்பும் அந்த இசை ஆர்ப்பரிப்பு அப்பப்பா
துடுப்பு விட்டு விட்டு போடும் இசை, தண்ணியின் தழும்பலிசை பின் உற்சாக படுத்திக்கொள்ள படகில் உள்ளவர்கள் செய்யும் சத்தம்/ஒலி அதுவே ஐலசாவாக மாற
மெதுவாக கிளம்பிய படகுகள் வேகமெடுக்க கூடவே துடுப்பிசை, தண்ணீர் தழும்பல், ஐலசா எல்லாமே வேகமெடுக்க
இரு குப்பங்களின் மக்களும் தலைவர்களும் ஆர்வமாய் பார்க்க உடனே இத்தனை ஒலிகளோடு சேர்ந்து கொள்ளும் மேள இசையும் அதுவரை திரையில் பார்த்திராத புதுமை ( ஜெமினியின் சந்திரலேக டிரம் நடனம் எல்லாம் ஒரு மாதிரி என்றாலும்)
ஒரு ஒட்டுமொத்த காட்சியை இப்படி பல்வேறு இசை வடிவங்களில் மிரட்டுவது என்பது இதுவே முதன் முறை.
டி.பிரகாஷ்ராவ் அவர்களின் காட்சியமைப்பும், பி.எல்.ராய் அவர்களின் ஒளிப்பதிவும் காட்சிக்கு கூடுதல் பலம்.
போட்டி வலுக்க இரு அணிகளின் படகும் மின்னல் வேகத்தில் ஓட இந்த சத்ததிலும் தாத்தாவாக எம்.ஜி.ஆர் தன் கைத்தடியால் அசோகனை தட்டும் அந்த ஒலி கூட துல்லியமாய் கேட்கும்
இருவரது கம்பு சண்டையும் அங்கே அரங்கேறும் . எம்.ஜி.ஆரின் படகு வெற்றியை நோக்கி வரும் வேளையில் இத்தனை இசையுடன் கை தட்டல், விசில் என எல்லாம் சேர்ந்து கொள்ளும் காட்சி அமர்க்களம்.
ஒரு 5 நிமிட காட்சிக்குள் எத்தனை எத்தனை ஜாலங்கள் செய்திருக்கிறார் மன்னர். இவர் செய்தது எல்லாம் அமானுஷ்யமே அன்றி வேறொன்றுமில்லை
5 1/2 நிமிடம் ஓடும் காணொளி comments’ல் கண்டு மகிழவும்
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 8
அமானுஷ்யம் என்று எதை சொல்வோம்.. நம் அறிவிற்கு எட்டாததை .. ஏதோ நம்மையும் மீறிய சக்தி .. திகிலூட்டுவது என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
மன்னரின் இசையும் அவர் எதை எபப்டி கையாள்வார் என்பதும் யாருக்கும் தெரியாத ஒன்று. PATTERN என்ற வார்த்தையை உடைத்தெரிந்தவர் . இது தான் வரும் என நாம் நினைத்தால்
அங்கே எதிர்பாராத ஒன்றை தருவார் அது தான் மெல்லிசை சக்ரவர்த்தி .. எம்.எஸ்.வி அவர்களின் திறன். அதனால் தான் இந்த தலைப்பு.
இன்றைய அமானுஷ்யம் சற்று வித்தியாசமானது.
படத்தில் ஒரு காட்சி .. கதா நாயகனின் காதல் இவ்வளவு ஆழமானதா என்று நினைத்து அதற்கு தான் அருகதை உள்ளவளா என்று நினைத்து அவள் விலகும் போது காதலன் அவளை
இழுக்க பாடும் சோக கீதம் இன்றும் அது அற்புத பாடலாய் திகழ்கிறது .. பாடல் எது என்பது நான் சொல்லி தெரியவேண்டுமா ..
வாலி அவர்களின் வரிகளை மனதை உருக்கும் விதமாக ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் பாடிய “உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா”
என்ன அருமையான இசை, அர்த்தமுள்ள வரிகள் .. உணர்வுகள் பொங்கும் டி.எம்.எஸ் குரல் .. திரையில் ஆணழகன் எங்கள் புரட்சித்தலைவர்
இவ்வளவு இருந்தும் அந்த பாடல் ஒரு சோகம் இழையோடும் பாடல்.. அட படத்தின் பெயர் வரும் இந்த பாடல் சந்தோஷமாக இருந்தால் எப்படி இருக்கும் என படம் பார்த்த ரசிகர்கள்
நினைத்திருப்பார்கள். அவர்களின் நாடி பிடித்து பார்த்தது போல் ஏ.சி.டியும் மெல்லிசை மன்னரும் செய்திருந்த மிரட்டல் தான் படத்தின் கடைசி 6 நிமிடங்கள்.
அசோகன் மக்கள் திலகத்திற்கும் சரோவிற்கு இடையே உள்ள காதலை உணர்ந்து விலகிக்கொள்ள காதலர் இருவரும் இணையும் நேரத்தில் பாலுவாக நடித்தது முதலாளி ஜே.பி என்பது தெரிய வரும் பொழுது
ஏற்கனவே பல முறை மோதல், நடிப்பு என்று இவர்களுக்கிடையே இருந்ததால் மீண்டும் அவரே வெற்றி பெற்றார். தான் காதலித்த பாலு தனக்கு கிடைக்கவில்லை, பணக்கார ஜே.பி தனக்கு வேண்டாம்.
இதிலும் உங்களுக்கு வெற்றி என்று தானே (female ego) பலவற்றையும் கற்பனை செய்துகொண்டு சரோ தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரில் ஏறி வேகமாக ஓட்ட
பின் தொடரும் தலைவர் பின் ஹோட்டலில் கத்தி காந்தாராவுடன் சண்டை அது முடிந்து இருவரும் கண்களால் பேசும் காட்சிக்கு மன்னர் கொடுத்திருக்கும் இசை ஆஹா
என்னை விட்டா போகப்பார்க்கிறாய் என்பதாய் தலைவர் கோபமாய் பார்க்க , நானா போவேனா என்று சரோ தன் மீன் விழியால் பதில் சொல்ல பின் தலைவர் புன்னகைக்க கண்களின் பாவம் மாறுவதும்
அந்த பின்னணி இசை அபப்டியே காதலர்களின் இதயத்தை பிரதிபலிக்கும் அப்படியே தலைவர் கை நீட்ட அவர் கையில் தன் கையை வைப்பார் சரோ .. பின் நடந்தது என்ன .
முன்பெல்லாம் கதைகளில் குறிப்பாக சிண்ட்ரெல்லா கதைகளில் வருவது போல் அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்பது போல்
சட்டென்று இசை தொடங்கும்.. அது தான் மெல்லிசை மன்னர். காதலர்கள் இருவரும் சேர்ந்துவிட்ட மகிழ்ச்சி, ஒரு தொழிலதிபர் மன நிம்மதிக்காக சிம்லா வந்து தன் வாழ்க்கை துணையை கண்டுகொண்ட மகிழ்ச்சி
தான் வெளியே வெறுத்தாலும் உள்ளே அளவில்லா ஆசை கொண்ட தன் பாலு/ஜே.பி தனக்கு கிடைத்த சந்தோஷம் எல்லாமே வெறும் இசையிலும் .. அன்பே வா என்ற அந்த 2 வார்த்தையை மட்டும் பயன்படுத்தி ஒரு 5 நிமிட இசை ராஜாங்கம்
நடத்தியிருப்பார் மெல்லிசை மாமன்னர். அதை அவ்வளவு அழகாய் படமாக்கியிருப்பார் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள்
அமர்க்களமான மேற்கத்திய இசையுடன் துவங்கும் ஆர்ப்பாட்டம் .. அடேயப்பா .. துள்ளலாய் எம்.ஜி.ஆர், தக தகவென ஜொலிக்கும் சரோ , பூச்சரங்களால் சுற்றிய சரோ, தலைவர் சரங்களை இழுக்க, சரோ ஹ்ம்ம் வரமாட்டேன் என சொல்ல
கொஞ்சலாய் முறைப்பார் .. பின் இருவரும் சிரிக்க.. இசையும் துள்ளும் .. துள்ளாதா .. காதலர்கள் இணைந்த சந்தோஷமாயிற்றே .. அன்பே வா என அழகாய் துள்ளலாய் இந்த முறை உற்சாகமாய் பாடுவார் டி.எம்.எஸ் .. சரோ மெல்ல மெல்ல
அவர் அருகே வருவார். இசையோ மயக்கும்.. FAIRY TALE போல் தேவதைகள் வாழ்த்த வேண்டாமா . தேவதைகள் போன்ற பெண்கள் (சி.ஐ.டி சகுந்தலா ஒரு நடன மங்கை அந்த குழுவில்) அவர்களும் கோரஸாய் அன்பே வா என்று பாட
ஆனந்தம் அரம்பம்(அனைவரும் மயில் போன்ற உடை அணிந்து ஆடியபடி அன்பே வா என்பார்கள்)
இப்பொழுது தலைவர் பாடுவார் .. “உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் கண்டேன் அன்பே வா” மெல்ல சரோவை நோக்கி நடக்க சரோ வெட்கதுடன் தலை குணிந்து செல்வார் .. மிக அழகு.இசையும் அவரோடு நடக்கும்
கண்கள் என்னும் சோலையிலே தென்றல் கண்டேன் அன்பே வா என்று பாடுவார் .. உடன் வரும் இசை அபாரம்.
நடன மங்கையர் சுழன்றபடி அன்பே வா என்று கோஷ்டி கானம் பாடுவார்கள். இனி வரிகள் இல்லை .. இசை இசை ஆட்சி மட்டுமே..
பெண்கள் குடை படித்தபடி நடனமாட அதற்கொரு இசை சட்டென்று தலைவரும் சரோவும் தோன்ற உடனே பாரம்பரிய இசை (தபேலா விளையாடும்)
இது எல்லாமே அவர்கள் அடைந்த ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம் என்பதை பிரதிபலிக்கும் இசை..
இப்பொழுது அப்படியே உற்சாகம் பொங்கும் இசை . நடன பெண்கள் பட்டாம்பூச்சி வேடமிட்டு துள்ளுவார்கள். இசையும் ஊற்றாய் பொங்கும்
பின் புடவை உடுத்திய நடன பெண்கள் பூச்சரங்களை சுற்ற தொடரும் பாரம்பரிய இசை .. அப்பா என்ன ஒரு இசை விருந்து ..
கூர்ந்து கவனித்தால் ஒரு திருமண ஏற்பாடே இந்த இசையில் காணலாம். தோழிகள் இருவரையும் தயார் செய்வதாய் இசை அமைந்திருக்கும்.
தொடரும் பெண்களின் நடனமும் அதற்கான இசையும் அடேயப்பா என்னவென்று சொல்வது . ஒளிப்பதிவாளரும் அவர் பங்குக்கு மிரட்டியிருப்பார்
மங்கலம் என்றால் மன்னருக்கு ஷெனாய் தானே .. துள்ளி துள்ளி என்னை வாசியுங்கள் என்பது போல் ஷெனாய் ஒலிக்கும் .. இந்த இடம் அபாரம்
அபப்டியே தாலி கட்டி மேளம் கொட்டுவதை ஷெனாய் இசையால் பூர்த்தி செய்திருப்பார் மன்னர். கல்யாணம் முடிந்து இருவரும் அக்னியை வலம் வருவதையும் அழகாய் காண்பித்திருப்பார் ஏ.சி.டி
ஷெனாய் விளையாடும் .. (ஷெனாய் என்றாலே சத்யம் தானே .. என்னமாய் வாசிப்பார்)
திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி .. ஒவ்வொருவராய் அறிமுகம் செய்வது போல் இசை தொடரும்
அசோகன் அறிமுகம், ராமாராவ் மாதவி அறிமுகம், பின் தொடரும் பெண்களின் நடன் .. மீண்டும் மேற்கத்திய இசை பின் மீண்டும் பாரம்பரிய இசை என எல்லோரும் சேர்ந்து ஆடியபடி
பின் அந்த பெண்கள் அன்பே வா அன்பே வா கோஷ்டி கானம் இசைக்க .. குழுவில் நாகேஷ் மனோரமாவும் துள்ளி துள்ளி ஆட
டி.ஆர்.ராமசந்திரன் மற்றும் முத்துலெட்சுமி அறிமுகம் . அது கூட இசை வடிவில் ..
கடைசியில் ஆண்கள் தலைவரையும், பெண்கள் சரோவையும் முதலிரவு அறைக்குள் தள்ளும் விதமாய் அந்த காட்சி முடியும் ..
அடேயப்பா படம் முடிந்து விட்ட நிலையில் கடைசி ஒரு 5 நிமிடத்திற்காக இவ்வளவு இசை மிரட்டலா அதை வீணடிக்காமல் .. காதலர்கள் கல்யாணம் செய்து நல்லபடியாக வாழ்ந்தார்கள் என்பதை காட்டுவதற்கு
2 வரி, மற்றும் 2 வார்த்தை அன்பே வா அதை மட்டும் வைத்துக்கொண்டு மன்னரும் .. அதற்காக ஏ.சி.டியும் .. செய்திருக்கும் ஜாலம்.. அபாரம் அருமை .. சொல்ல வார்த்தையில்லை.
மன்னரின் இந்த 5-6 நிமிட இசையாட்சி அமானுஷ்யம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 7
மீண்டும் அதே கூட்டணி தான். இவர்கள் அமானுஷ்யத்தை குத்தகைக்கு எடுத்திருப்பார்கள் போல
இவர்கள் பெருமையை சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம் ஆனாலும் முழுப்பெருமையையும் திறமையையும் சொல்லி முடிக்க நமக்கு ஆயுள் போதாது
இன்றைய அமானுஷ்யம் படமே ஒரு அமானுஷ்யம் .. அதுவும் இந்த பாடல் கே.பி என்ற அந்த ஒரு மாமேதையால் மட்டுமே சிந்திக்க முடிந்த ஒன்று , வேறு எந்த கொம்பனாலும் முடியாத ஒன்று
அதே போல் இப்படி ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னர் என்ற அந்த அமானுஷ்யத்தால் மட்டுமே சாத்தியம் .. வேறு யாராலும் முடியாது (தானே தனக்கு பட்டங்கள் சூட்டிக்கொண்டு வலம் வந்தாலும்) மன்னரின் மூளையோ
மன்னரின் திறமையோ யாருக்கும் கிட்டாத ஒன்று. மன்னரின் மூளையை பாதுகாத்திருந்தால் 100 என்ன 1000 இசையமைப்பாளர்கள் அதிலிருந்து உருவாகியிருப்பார்கள் அப்படிப்பட்ட மூளை
பாலசந்தர் அப்படி ஒரு சவால் விடுகிறார் மன்னருக்கு. எப்படி .... இதோ இப்படி
உச்சகட்ட காட்சிகள் அதவாது க்ளைமாக்ஸ் என்பார்கள் ஆங்கிலத்தில் .. கதை எப்படி எப்படியோ போய் ஒரு முடிவிற்கு வரும் காட்சியே அது. ஒரு இயக்குனரின் முழு திறமையும் வெளிப்படும் இடம் இந்த க்ளைமாக்ஸ்
அப்படி ஒரு க்ளைமாக்ஸ் வைக்கிறார் கே.பி .. என்ன புதிர் போடுகிறேனே என்று பார்க்கிறீர்களா சரி சரி இதோ சொல்லிவிடுகிறேன்...
இவர்கள் எல்லோருமே அபூர்வமானவர்கள் அதனால்தானோ என்னவோ படத்தின் பெயரும் அபூர்வ ராகங்கள்.
இந்த படமும் இதன் பாடல்கள் பற்றியும் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை
படத்தின் பெயரைப்போலவே பிரத்யேகமாக பாலமுரளி அவர்களிடம் கேட்டு மஹதி என்ற ராகத்தில் மன்னர் அமைத்து தாஸேட்டன் பாடிய அதிசய ராகம் பாடல் அடைந்த வெற்றி நான் சொல்ல வேண்டியதில்லை
ஆனால் நாம் பேசப்போகும் பாடல் அமானுஷ்யம் வகையை சார்ந்தது .. க்ளைமாக்ஸ் என்று சொல்லிவிட்டேனே புரிந்திருக்குமே .. ஆம் கேள்வியின் நாயகனே பாடல்
பாடலுக்கு போவதற்கு முன் ஒரு சில விஷயங்கள்
காலம் காலமாக தந்தைக்கும் மகனுக்கும் மோதல் என்பது வழக்கமான ஒன்று .. அதுவும் விடலைப்பருவத்தில் அப்பாவை எதிரியாக பார்க்கும் இளைஞர் பட்டாளம் ஏராளம்
அப்படி ஒரு இளைஞன் ,, முரட்டு இளைஞர்களால் தாக்கப்பட்டு வீதியில் கிடக்க அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் பாடகி பைரவி .. அவனது முரட்டு குணத்தை தன் அன்பால் மாற்றுகிறாள்
அதுமட்டுல்ல அவனிடன் இருக்கும் இசை ஞானத்தையும் தூண்டுகிறாள் .. அவன் மிருதங்கம் வாசிப்பதை பாராட்டி அதில் அவன் மேலும் கற்றுக்கொள்ள உதவுகிறாள்.
ஒரு குழந்தையிடம் ஒரு நாயோ பூணையோ அல்லது பொம்மையோ கொடுத்தால் நாளடைவில் அது ஒருவித possessiveness வளர்ந்துவிடும் .. அந்த பொருள் தன்னுடையது என்பதாக நினைக்கும்
அப்படி இவனும் அவள் குரலுக்கும் அவள் அன்பிற்கும் அடிமையாகிறான். அவள் மேல் காதல் கொள்கிறான்..
அதுவும் அவளொரு பைரவி என்று அவன் அதிசய ராகம் பாடலில் போட்டு உடைக்கும் காட்சியில் கன்னத்தில் ஒரு அறை விழுமே .. அப்படியும் அவன் மசிந்தானா என்ன ஹும் ஹும் அவன் பிடிவாதம் பிடிக்கிறான்.
அவளோ தன் நிலையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள்
அதே போல் அவன் நல்லவனாக அவள் கொடுத்த வாக்குறுதியால் தவிக்கிறாள். தன் நண்பரான டாக்டரிடம்( நாகேஷ்) ஆலோசனையும் கேட்கிறாள் ..ஒரு வேளை தானும் அவனை விரும்புகிறோமோ என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்உ
அவனை வீட்டை விட்டு துறத்தவும் முயல்கிறாள் ஆனால் அவனோ முழுசாய் மாறி நல்லவனாய் வந்து நிற்க ஏதும் செய்ய முடியாதவளாய் அவள் .. அவனது பிடிவாதத்திற்கும் அன்பிற்கும் கட்டுபடுகிறாள் (முழு மனதாய் அல்ல)
எந்த இடத்திலும் விகாரமாகவோ விகல்பமாகவோ ஒரு காட்சியையும் வைக்காத கே.பியை ஏதோ பெரிய குற்றம் இழைத்தவர் போல் பேசிய இந்த சமூகம் எல்லாமே வக்கிர புத்தியுடையவர்கள் . (அவர்கள் மனதில் ஆயிரம் அழுக்கு ஆனால் வெளியே நல்லவர்களாய் வேஷம் போடுபவர்கள்)
அதே சமயம். சிறிய வயதில் தன் காதலன் கொடுத்த குழந்தையை ஒரு ஹாஸ்டலில் விட்டு வளர்த்து வருகிறாள். தான் வேண்டாம் என்று நினைத்த தாயின் மீது அந்த குழந்தைக்கு வெறுப்பு . தாயும் வேண்டாம் தாயின் பணமும் வேண்டாம்
என நினைக்கிறது அந்த பிஞ்சு உள்ளம் . வாழ்க்கை பயணத்தை தன் காலிலேயே தொடர நினைக்கிறது . அப்படி தானே வேலை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவளுக்கு நாடகம் பார்க்க போன இடத்தில் ஒரு பெரியவரின் அறிமுகம் கிடைக்க
அதுவும் அவர் ஏன் அழுதாள் என கேட்டு அவரை குடைவதும் நகைச்சுவை பின் ஒருவழியாக அவர் தன் கதையை சொல்ல அதே பெரியவரை நடுரோட்டில் குடித்துவிட்டு காரில் மயங்கிய நிலையில் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்து பின் அவர்
குடிப்பழக்கத்தை நிறுத்த வைத்து அவரது வீட்டில் தங்குகிறாள் .. இதை தவறாய் பார்ப்பவர்களுக்கு தவறு .. அவளைப்பொறுத்த வரையில் அது சரியே .. அப்படி தங்கி மெல்ல மெல்ல அவர் மேலொரு ஈடுபாட்டையும் வளர்த்துக்கொள்கிறாள்
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. பெரியவர் தன்னால் முடிந்த வரை மறுத்து சொல்வார், ஊரார்கள் நகைப்பார்கள் (கை கொட்டி சிரிப்பார்கள்) என எல்லாம் சொல்லுவார். ஒரு கட்டத்தில் தன் மனைவி அம்ர்ந்த நாற்காலியில் இந்த பெண்
கால் வைத்து ஏறியதற்காக அறையவும் செய்வார். அவரது க்ளப் நண்பர்களின் ஜாடை மாடையான பேச்சுக்களுக்கு அவள் தன் மகள் போன்றவள் என்றும் பதில் சொல்வார். இப்படி அந்த கதாப்பாத்திரமும் தன் வயதையும் நிலையையும்
உணர்ந்தே அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படி இரண்டு பெரியவர்களும் ஒரு வித தயக்கத்துடனே சரி என்று சொல்லியிருந்தாலும் விதி வலியது .. பத்திரிக்கை ரூபத்தில் வந்தே தீரும்.
பத்திரிக்கையில் அம்மா பெண் புகைப்படத்துடன் கட்டுரை
அவரோ நல்லவர் உடனே பைரவியை பார்க்க கிளம்புகிறார் ஆனாலும் பார்க்க முடியாததால் அவளது நண்பரை பார்க்க அப்படி பைரவியின் மகள் குறித்து தகவல் என கதை சூடுபிடிக்கும்
அதுவும் பெரியவர் பெங்களூரில் பைரவியின் கச்சேரி ஏற்பாடு செய்யும்படி தன் க்ளப் நண்பர்களிடம் சொல்ல (அம்மாவையும் மகளையும் சந்திக்க வைக்கும் முயற்ச்சியில் பெரியவர்)
தினசரியில் மகனை பிரிந்து வாடும் அப்பாவின் செய்தி (அவர் எப்படியாவது தன் மகனை தன்னிடம் வர வைக்கும் முயற்ச்சி)
இதுவரை பைரவி ரஞ்சனி என்று தனித்தனியாக இருந்த காட்சிகள் எல்லாம் நேர்க்கோட்டில் வரப்போகின்றன என அறிவிக்கும் விதமாய் கே.பி “ராகமாலிகை” என்று கார்ட் போடுவாரே
மனுஷன் மாமேதை .. அப்படியே அவன் கன்னத்தில் செல்லமாக முத்தமிடவேண்டும் ...
(இதுவரை நடந்த அனைத்து காட்சிகளிலும் இன்னொரு ஹீரோ உண்டு அவர் தான் மெல்லிசை சக்ரவர்த்தி நம் மன்னர் .. என்ன ஒரு பின்னணி இசை படம் முழுவதும்0
இப்பொழுது கே.பி என்னும் அந்த ஜீனியஸ் விஸ்வரூபம் எடுக்கும் நேரம் ..
ராகமாலிகை இப்படி தொடர்கிறது
பெரியவர் பைரவி அறிமுகம்..
தந்தை மகன் உரையாடல் (ஸேம் ஓல்ட் சன், ஸேம் ஓல்ட் ஃபாதர்)
தந்தயின் அனுமதி அவன் பைரவியை கல்யாணம் செய்து கொள்ள ....(அதுவும் கமலின் அந்த டோன் .. ஆமா ஆமா சொல்லத்தான் வந்தோம் என்பதுபோல் ஒரு அலட்சியம்) இன்னும் சற்று நேரத்தில் ஒரு பிரளயமே
வரப்போவதை உணராமல்
வேணும்னா காலில் விழுகிறோம் என்று அலட்சியமாக மகன் சொல்ல, சரி இரு அம்மாவை கூப்பிடுகிறேன் என்று அவர் சொன்னதும் அவன் முகம் போகும் போக்கு ....
இன்னும் ஒரு படி மேல் .. அங்கே காபியுடன் மகள் வர அம்மாவிற்கு அதிர்ச்சி .. எப்படி இந்த கே.பியால் மட்டும் முடிகிறது ..
இந்த காட்சி அப்படி ஒரு மிரட்டல் ..
இந்த காட்சியின் பலம் மேஜர் சுந்தரரஜன் அவர்கள் .. மனுஷன் சும்மா அசத்தியிருப்பார் (அவர் எது நடக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதுவே நடந்தது0
கண்ணனின் கீதை போல் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ..
ரஞ்சனி நீ என்னை கல்யாணம் செய்துக்கப்போற,
என் பிள்ளை உங்க அம்மாவ கல்யாணம் செய்துக்கபோறான்..
மக்கள் உடனே ஆவேசமாக என்ன இது என தாம் தூம் என குதிக்க வேண்டியதில்லை. சிறியவர்கள் எப்படி பெற்றோர்களிடம் சண்டை போட்டு தவறான முடிவுகளை வாழ்க்கையில் எடுக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக
அமைக்கப்பட்டிருக்கும் வசனம் .
நான் உங்க அம்மாவிற்கு மாமனார், அப்ப நீ உங்க அம்மாவிற்கு மாமியார் ( வயலின் அப்படியே நால்வரின் மன நிலையை படம்பிடிக்கு இசையால்)
புதுமை புரட்சி .. உலத்துல யாருமே செய்யாத புரட்சிய நாம செய்யப்போறோம்.. யெஸ் என சொல்லி சிரிப்பார் பாருங்கள் அது இளைஞர்களுக்கான சாட்டையடி
பின் தன் மகனைப்பார்த்து பிரசன்னா "இந்த கேள்விகளுக்கெல்லாம் நாயகன் நீ தான்” என அவர் சொன்னதும் காட்சி அந்த பெங்களூர் கச்சேரிக்கு மாறும் ..
அப்பா அதாவது க்ளைமாக்ஸ் முடிச்சுக்களை ஒரு பாடல் மூலம் அவிழ்க்க வேண்டும் என்ற அந்த சிந்தனை கே.பிக்கு மட்டுமே சாத்தியம் ..
ஒவ்வொருவர் மனதில் ஆயிரம் கேள்விகள், என்ன நடக்கப்போகிறது என்ற தவிப்பு .. ஒரு வித சிக்கலான சூழலை நாமே உருவாக்கிக்கொண்டுவிட்டோமோ என்ற கேள்வி இப்படி சஞ்சலத்துடன் அந்த கச்சேரி ஆரம்பிக்கிறது
கேள்வியின் நாயகன் அவனாக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டியது அவள். அவளே நல்ல முடிவை பாடல் மூலம் தெரிவிக்கிறள்.
இதுவரை கே.பியின் விஸ்வரூபம்.. இனிமேல் மெல்லிசை மாமன்னர் மற்றும் கவியரசர் இருவரின் விஸ்வரூபம் ..
மிருதங்கம் மிரட்ட (உணர்ச்சிகளை கொட்டி மிருதங்கம் வாசிப்பான் அவன்) பைரவியின் கச்சேரி ஆரம்பம்
கேள்வியின் நாயகனே என வாணிஜெயராம் குரலால் ஆரம்பிக்க கண்ணால் கமலை ஸ்ரீவித்யா பார்ப்பாரே ஒரு பார்வை. அது 1000 கேள்விகளுக்கு சமம்
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
(கேள்வியின்)
உலக மேடையில் எல்லோருமே நாடகம் நடிக்கின்றோம் என்று வாழ்க்கை தத்துவத்துடன் துவங்குகிறார் கவியரசர்.
எப்படி நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொள்கிறோம். மனித மனம் எப்படி குரங்கு போன்றது என்பதை வரும் சரணத்தில் விளக்குவார் கவியரசர்
அதுமட்டுமல்லாது கமலிடம் கேட்பதாய் அமைத்திருப்பார் .. என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம் எப்படிப்பட்டது பார்த்தாயா என்று அவனை குத்துவது போல் வரிகள்
மன்னரோ அச்சு அசல் ஒரு கர்நாடக கச்சேரி இசையை மிருதங்கம், வயலின், மோர்சிங் என மிரட்டியிருப்பார்
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா காளை வரும்? (என்ன ஒரு கேள்வி .................. )
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?
வேலிக்குமேல் ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி? (இதை கேட்கும்பொழுது ஸ்ரீ கமலை பார்க்கும் பார்வை அப்பப்பா)
ஒரு வித கலக்கத்தில் கமல் மிருதங்கம் வாசிப்பதை நிறுத்திவிட்டு வெளியேற .. அங்கு வயலின் மட்டும் ஒலிக்கும்
இப்பொழுது இன்னொருவர் மிருதங்கம் வாசிக்க பாடல் தொடரும்
(கேள்வியின்)
இந்த இடத்தில் கடம் கஞ்சிரா மிருதங்கம் மூன்றுக்கும் போட்டியே நடக்கும்
ஏற்கனவே அவளது கணவன் வந்திருந்தாலும் கமல் அவனை தன் மனைவியை பார்க்க விடவில்லை
எவ்வளவோ முயன்று கடைசியில் கச்சேரி நடக்கும் இடத்திற்கே வந்து ஒரு பெண்ணிடம் ஸ்ரீவித்யாவிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தை கொடுக்கிறான் அவளது கணவன்(ரஜினி)
அந்த கடிதத்தின் வரிகள்
“உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கின்றேன்
உனது தரிசனம் தேடி உன் மன்னிப்பை நாடி”
இதை படித்தவளின் மன நிலையை இசையால் வார்த்தையால் கொடுத்திருப்பார்கள் மன்னரும் கவிஞரும்
அழுவதா சிரிப்பதா .. ஏதோ இந்த புரியாத புதிருக்கு விடையாக ஆண்டவனே அனுப்பி வைத்திருக்கிறானோ
காமிரா ஸ்ரீயின் கண்ணை மட்டுமே படம்பிடிக்க விழியோரத்தில் நீருடன் பாடலை தொடருவாள்
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகிறான் ( இந்த தேடுகின்றாள் என்று பாடும்போது ஸ்ரீயின் விழிகள் அந்த அரங்கையே தேடும் .. காமிராவும் உடன் தேடும்)
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
தன் கணவனை பார்ப்பாளோ என்பதை எவ்வளவு அழகாய் கவியரசர் திருமலை, அலமேலு என் அழகாய் எழுதியிருக்க மெல்லிசை மன்னரின் அந்த மெட்டு
செல்வாளோ .. செல்வாளோ ...... ஏக்கம் எட்டிப்பார்க்கும் .. அழுகை தொண்டையை அடைக்க
கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு என்று மேலும் பாட முடியாமல்(எவ்வளவும் முயன்றாலும் .. கச்சேரியாவது இதாவது என் கணவரை பார்த்தால் போதும் என எழுந்து ஓடத்துடிக்கும் அவள் மனது)
நா தழுதழுக்க .. சட்டென்று உடன் ஒலிக்கும் குரல் ஆம் மகள் மேடையேறி தாயுடன் சேர்ந்து பாடுகிறாள்.. (குரல் சசிரேகா)
(கேள்வியின்)
கே.பி என்ற ஜீனியஸ் எட்டிப்பார்க்கும் நேரமிது .. மெல்ல மகளை தாயுடன் மேடையேற்ற .. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்ற கவியரசரின் வரிகளுக்கு ஏற்ப
அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து அழ (அந்த காமிரா கோணம் .......ஸ்ரீயின் முகமும் ஜெயசுதாவின் முகமும் ...........ஜீனியஸ் ஷாட்)
கவியரசரின் முழு விஸ்வரூபம் இந்த சரணத்தில்.
அம்மாவும் மகளும் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து கொள்ளும் இந்த காட்சியை இப்படி எழுதுகிறார்
தாய் -ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
மகள் - பார்த்துக்கொண்டால்... (ஸ்ரீ தன் மகளின் கரங்களை பற்றிக்கொள்ள) இனி நான் இருக்கிறேன் என்று மகள் சொல்வது போல் அந்த காட்சி
தாய்- அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
மகள் - இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? (இனிமேல் நம் பார்வை வேறல்ல என்று மகள் கொடுக்கும் உறுதி)
இந்த இடத்தில் ஸ்ரீயின் முகம் ஜெயசுதாவின் முகம் .. தூரத்தில் ரஜினி .. இந்த மூவருக்கும் உண்டான தொடர்பை ஒரு ஷாட்டில் சொல்ல முடியுமா .. அதுதா கேபி
தாய் - பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே (இனிமேல் என்னைவிட்டு போக மாட்டாயே என்பதாய் கேள்வி)
நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே (தவறான முடிவெடுக்க இருந்தேனே வேதத்தை மறந்து நடக்கும் முன் நம் பேதம் மறைந்துவிட்டது என்று மகள் கூறுவது அவளுக்கு மட்டுமல்ல இளைய சமுதாயமே சொல்வதாய்)
இந்த இடத்தில் இந்த வரியை ஜெயசுதா பாடுவதை கவனியுங்கள் தலையை குனிந்து பயந்து பாடி அம்மாவை பார்ப்பார் .. யோவ் பாலசந்தர் உன்னை கொண்டாட ஒரு யுகம் போதாது
தாயும் மகளும் சேர்ந்தாயிற்று
தாய் தாய் தானே உடனே அவளது முதல் கேள்வி .. (இது வரை நீ எப்படி இருந்தாய்)
தாய் - கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
மகள் - உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? உன்னை சந்திக்கவே உயிரோடு இருந்தேன் ..
தாய்- உடல் எப்படி? (வயது வந்த பெண் தனியாக வாழ்வது என்பது ஆபத்து .. தாய்க்கே உண்டான பயத்துடன் கேள்வி கேட்கிறாள். உடல் எப்படி )
மகள்-முன்பு இருந்தாற்படி...( நான் ரஞ்சனி நெருப்பு .. சிந்தையில் முற்போக்காய் இருந்தாலும் உடலில் நெருப்பு) எப்படி உன்னிடம் இருந்து போகும்போது இருந்ததோ அப்படியே
தாய்- மனம் எப்படி? ( மனம் மணம் 2’ம் பொருந்தும். இனிமேல் உன் மனம் எப்படி )
மகள்-நீ விரும்பும்படி...(இனிமேல் எல்லாமே நீ விரும்பும்படி) என்று முடிக்கிறாள்
கேள்வியின் நாயகன் போய் கேளிவியின் நாயகியே என்று பாடுகிறாள் இருவரும் சேர்ந்து பாடுகிறார்கள்
தாய் மகள் சேர்ந்தாகிவிட்டது. தன் மகள் தனக்கு கிடைக்க காரணம் அந்த பெரியவர். அவரது அன்பு மகனை அவரிடம் சேர்க்கும் பொறுப்பு இவளுக்கு இருக்கிறதே
அவனுக்காக பாட்டிலேயே பதில் சொல்கிறாள்
பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா (இந்த வரி பாடும்போது மேஜரின் தவிப்பு, ஸ்ரீ கமலை பார்த்து பாடுவது என மெய் சிலிர்க்கும்) சிவன் ரொம்பவும் ஏங்கிவிட்டர் .. இனியும் அவரை ஏங்க விடாதே பிடிவாதம் வேண்டாம்
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா (பக்கத்தில் இரு முருகா .பக்கத்திருமுருகா)
திருமுருகா...திருமுருகா... உச்சஸ்தாயில் முடியும் அந்த கச்சேரி
கே.பி என்ற ஜீனியஸ் அவர்களின் க்ளைமாக்ஸ் . பாடல் ஆரம்பத்தில் மேடையில் ஸ்ரீவித்யா மற்றும் கமல், கீழே பார்வையாளர் வரிசையில் மேஜர் மற்றும் ஜெயசுதா
பாடலின் நடுவில் கமல் எழுந்து ஓரமாக போக ,, ஜெயசுதா எழுந்து மேடையில் தாயுடன் சேர ,, பாடலின் முடிவில் கமல் கீழே வந்து மேஜர் பக்கத்தில் உட்கார .. இது தான் சிறப்பான முடிவு என்று சொல்லாமல் சொல்லும்
எங்கள் கே.பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
இப்படி ஒரு காட்சியை தமிழ்த்திரையுலகம் அதுவரை கண்டதில்லை, ஒரு கச்சேரியை க்ளைமாக்ஸாக்கி அதில் தன் ஆளுமையை காட்டிய மெல்லிசை மன்னரும் .. இவர்கள் இருவரும் இப்படி மிரட்டினால்
தன் பேனாவால் மிரட்டிய கவியரசர் ( ஒரு கண்ணும் மறு கண்ணும் அந்த சரணம் ஒன்று போதும் கவியரசரின் புகழ் பாட)
இதே பாடலை தெலுங்கில் ரமேஷ் நாயுடு செய்திருப்பார். மன்னர் செய்ததையொட்டியே செய்திருப்பார். சுசீலாம்மா பாடியிருப்பார் தெலுங்கில்
இப்படி ஒரு அமானுஷ்யம் யாரும் கண்டிராத ஒன்று ..
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 6
அதென்னமோ அமானுஷ்யம் என்றாலே அது கே.பி மன்னர் கூட்டணிதான் போல
என்னுடைய முகனூல் நண்பர் ஒருவர் பாடல் காட்சியை படமாக்குவதில் ஸ்ரீதர் மற்றும் பாரதிராஜா என்று சொல்லியிருந்தார்
ஸ்ரீதர் சரி பாரதிராஜா (வெள்ளை தேவதைகள் என்ற பெயரில் பல பாடல்களை ........... சொல்லவும் வேண்டுமோ)
ஸ்ரீதரைவிட இன்னும் சிறப்பாக பாடல் காட்சியை படமாக்குபவர் கே.பி. ஒருவரே
அவருக்கு அடுத்து ஸ்ரீதர், ஏ.சி.டி, சி.வி.ராஜேந்திரன், பந்துலு, பி.மாதவன் என எல்லோரும் உண்டு
இந்த முறையும் அமானுஷ்யம் கே.பி - மெல்லிசை மாமன்னர் கூட்டணிதான்
திரைப்படங்களில் சொல்லாமல் போன காதல் அது குறித்து காட்சிகள் என பல இயக்குனர்களும் காட்சியமைத்துள்ளார்கள்
இருந்தாலும் எங்கள் கே.பி ஒரு படி மேல் .. ஜீனியஸ் அப்படி ஒரு காட்சியை வைக்கிறார். பாடல் எப்படி இருக்க வேண்டும்.
சொல்ல நினைத்து சொல்லாமல் போகும் போது ஒரு வித FREEZE நிலை என்பார்களே அதுபோல ஆசை இருக்கும் ஆனால் சொல்ல கூச்சம் பயம்
சிலருக்கு பயம் எதனால்.. சொன்னால் ஒரு வேளை அந்த காதலை அவனோ அவளோ மறுத்துவிடுவார்களோ என்ற அச்சம்
இங்கும் அப்படித்தான் .. அவளுக்கு அவன் மீது காதல் ஆனால் அவனுக்கோ இன்னொருத்தி மீது காதல் .. இது பல படங்களில் பார்த்தது தானே என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது..
பாலச்சந்தருக்கும் கேட்டிருக்கும் என நினைக்கிறேன் அதனால்தான் இப்படி காட்சியமைக்கிறார்
அவன் தானும் சொல்லாமல் அவள் சொல்லட்டும் என்று இருக்கிறான்.. அந்த உணர்வில் அவளது ஓவியத்திடம் பேசுகிறான்
“நீயாக வந்து சொல்லாதவரை உனக்கு விடுதலை இல்லை என சொல்லி நானும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்” என்ற அந்த நொடியில் பாடல் ஆரம்பம்.
பாடல் என்ன படம் என்ன என்று தெரிந்திருக்குமே .. ஆம் சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல்
கே.பி என்ற வைரம் வழங்கிய மற்றுமொரு கொடை “சொல்லத்தான் நினைக்கிறேன்” 3 பெண்கள் ஒருவரை காதலிக்க ஆஹா அவனல்லவோ அதிர்ஷ்டம் செய்தவன் என்று நினைக்கையில் அவன் ஆகிறான்
இலவு காத்த கிளியாக
சிவகுமார், ஜெய்சித்ர,எஸ்.வி.சுப்பைய்யா,ஸ்ரீவித்யா, சுபா , ஏ.வீரப்பன் என எல்லோரும் நன்றாய் நடித்திருந்த படம்.
படத்திற்கு பலம் மெல்லிசை மாமன்னர் .. இசை , பாடல்கள் எல்லாமே அருமை. இது தான் கே.பி -எம்.எஸ்.வி கூட்டணியில் வாலியின் முதல் படம்
படத்தின் ஹைலைட் பாடல் என்றால் அது இதுதான் மாமன்னர் அமானுஷ்யம் என நிரூபித்த பாடல் இது அதுவும் அவர் குரலிலேயே கேட்டால் அந்த உணர்வு இரட்டிப்பாய் ஒலிக்காதோ
அப்படி அவர் ஆரம்பிக்கிறார்.. சொல்லமுடியாமல் தவிக்கும் நிலை என்பதால் பாடல் மிகவும் மெதுவாக அமைத்திருப்பார் ..
ஜெய்சித்ராவை நினைத்து நாயகன் பாடலை துவங்குவான்
வாலி காற்றில் மிதக்கும் என்ற வரி போட்டதாலோ என்னவோ காற்றில் மிதக்கும் உணர்வை இசையில் கொடுப்பார் மன்னர்
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
பாலச்சந்தர் மிக அழகாய் படமாக்கியிருப்பார். மெதுவாக ஜெய்சித்ரா பூங்கொத்துடன் மிதந்து வருவது போல் வருவார். பூங்கொத்தை குடுவையில் வைத்துவிட்டு இருவரும் மெதுவாய் மாடிப்படி இறங்குவர்..
அதற்கான இசை .. அழகோ அழகு.
இது சொல்ல முடியாமல் தவிக்கும் நாயகனின் நிலை..
அங்கே இன்னொருவள் தன் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். ஆம் ஸ்ரீவித்யா பாடுவதாய் தொடரும் பாடல்
ஊதுபத்தி புகை, தனிமையில் இருக்கும் பெண் ஓவியம் என பாலச்சந்தர் ஸ்ரீவித்யாவின் மன எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பார் (ஜானகியின் குரலில்)
தன் மன வீட்டில் அவன் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ என்று ஒருவித சந்தேகத்துடன் கேட்டு பின் அவளே முடிக்கிறாள் இப்படி
புகுந்தானே எங்கும் நிறைந்தானே (இந்த வரியில் அவளை அறியாமல் அவள் வெளிப்படுத்தும் புன்னகை )
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மன வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
இப்பொழுது ஸ்ரீவித்யா மெதுவாய்( மிதப்பது போல் ஓடி வர) அங்கே சிவகுமார் மாடிப்படிகளில் இறங்கி வர ... அற்புத காட்சியமைப்பு
இடையிசையில் வயலின் ஜாலம் .......... அப்பப்பா .. வாய் சொல்லாத உணர்வை இசை சொல்லும்
நாயகன் குளிக்கும் போது கூட அந்த எழில் மங்கையின் நினைவு ..
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ என்று சந்தேகம் இருந்தாலும் அவள் நடவடிக்கை எல்லாம் தன் மேல் காதல் உள்ளதை சொல்கிறது என்ற அந்த நம்பிக்கையில்
வருவாள் சுகம் தருவாள் என்று சொல்லி பாடுவான் ..
பாலசந்தர் 3 சிவகுமார் படங்கள் சுழல்வது, சிவகுமாருக்கு இருபுறமும் 2 நாயகிகள்
பின் மூவரும் ஒரு சாய்வு நார்காலியை நோக்கி ஓடிவர கடைசியில் ஜெய்சித்ரா அமர்வதாக அழகாக காட்சிபடுத்தியிருப்பார்
இப்பொழுது சுபா பாடுவதாய் ..
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆ ஹா
சுபா ஆ ஹா என முடிக்க விசில் வரும் பாருங்கள் அது தான் மெல்லிசை மாமன்னர்.
விசிலில் பல்லவி பின் வயலின் இசை என மிரட்டியிருப்பார்
முடிவுரை என்பது அவன் எழுதுவதாய் அமைத்திருப்பார் கே,பி. அவன் தன் நெஞ்சில் உள்ளதை பாடி முடிக்கிறான்
இதில் அவன் நினைவுகளில் அவள் ஊஞ்சல் ஆடுவது போல் skipping ஆடுவதாய் காட்சி அமைத்த கே.பி ஒரு ஜீனியஸ்
நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் (அவன் தன் நெஞ்சில் நின்றவளை ஓவியமாய் வடித்திருப்பான்)
நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள் தான் பாதி என கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே
இறுதியாக அவன் சொல்லத்தான் நினைக்கிறேன் என்று பாட , உள்ளத்தால் துடிக்கிறேன் (இரண்டு பெண்களும் நினைப்பதாய்)
சிவகுமார் நடுவில் .. ஒரு பக்கம் ஸ்ரீவித்யாவின் முகம் இன்னொரு பக்கம் சுபாவின் முகம்.. என பாடல் முடியும் ..
ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா
இந்த பாடல் சொல்ல நினைத்து சொல்லாமல் போகும் உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் பாடல்
வாலியின் மிகச்சிறந்த வரிகளை மெல்லிசை மன்னரும் ஜானகியும் அழகாய் பாடியிருப்பார்கள், அதுவும் மெல்லிசை மன்னரி குரலில் ஒலிக்கும் “சொல்லத்தான் நினைக்கிறேன்” சொல்ல முடியாத அளவிற்கு ஆஹா ஓஹோ .
ஸ்ரீவித்யாவின் பிறந்த நாளில் அவரது பாடலை பதிவிடும்படி ஆனது கூட அவருக்கு ரசிகனின் சமர்ப்பணம்..
ஏக்கமும் ஒரு வித அச்சமும் கலந்த ஒரு நிலையை இந்த பாடலைவிட அழகாய் எந்த பாடலும் சொல்ல முடியாது.
வாலி கே.பி மெல்லிசை மாமன்னர் .. அமானுஷ்யம் ............
அமானுஷ்யம் தொடரும்- ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 5
உலகிலேயே மிகச்சிறந்த இயக்குனர் யார் என்று என்னைக்கேட்டால் அது இயக்குனர் சிகரம் திரு கே.பாலசசந்தர் அவர்கள் தான் என்பேன்.
என்ன மனுஷன்யா அவர். ஜீனியஸ் என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணம் கே.பி
நீர்க்குமிழி முதல் பொய் அவரை அவரது படங்களையும் படைப்புக்களையும் ரசித்தவர்களுக்கு தெரியும் .. அவரது திறமை..
அவரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்தாலே அமானுஷ்யம் தான்..
இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த இயக்குனர் யாரென்றால் அது கே.பி அவரைப்போல் சிந்திக்கவோ , பாத்திரப்படைப்போ
யாருமே செய்ததில்லை
அப்படி அவர் படைத்த ஒரு பாத்திரம் பாரதியாருக்கு பிடித்த கண்ணம்மா ஆம் அக்னிசாட்சியில் அவர் படைத்த கண்ணம்மாவும் ஒரு புதுமைப்பெண் தான்.
அவளுடைய உலகம் தமிழ் கவிதை ரசனை அதே நேரத்தில் எங்கே கொடுமை நடந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாத குணம் கொண்டவள் இந்த கண்ணம்மா
எதையும் இன்னொரு கோணத்திலிருந்து பார்ப்பவள் .. உதாரணத்திற்கு அவள் அம்மா தலையில் பூ வைக்க வரும்போது .. அந்த பூ குறித்து அவள் சொல்லும் கவிதை (புஷ்பங்கள் - இலை ஏடுகளில் கிளைப்பேனாவால்
விருட்சங்கள் வரைகின்ற விருத்தங்கள் ........ மனிதர்கள் மட்டுமே அவைகளை திருட வருகிறார்கள்- வாலியின் கவிதை அவளது உள்மனதை சொல்லும் கவிதை)
அதே போல் சிறுவர்கள் பட்டம் விட்டு பட்டம் கிழந்துவிட அதற்கு அழுவது , குழந்தை உருவம் கொண்ட மெழுகு பொம்மை உருக அதை தாங்கிக்கொள்ளா முடியாத கோபம் என இந்த பாத்திரப்படைப்பே வித்தியாசமாக
செய்திருப்பார் கே.பி.
அப்படி அவளுக்கு மாறுபட்ட சிந்தனை இருப்பதாலோ என்னவோ படத்தின் ஆரம்பத்திலேயே கே.பி ஒரு மேடை நாடகத்தை வைக்கிறார்
அதுவும் ஒரு மாறுபட்ட சிந்தனையோடு .. “இன்னொரு கண்ணகி”
கண்ணகி தன் கணவன் கோவலனுக்காக மதுரையை எரித்தாள் .. அதனால் அவள் வரலாற்றில் இடம்பெற்றாள் உண்மை
ஆனால் வேறு ஒருவளிடம் இருந்துவிட்டு பின் தன்னிடம் வந்தவன், ஊரைவிட்டு ஊர் வந்து வியாபாரம் செய்ய போன இடத்தில் சிலம்பால் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டவனுக்காக
ஒரு பெண் ஒரு ஊரையே எரிப்பது எந்த வகையில் நியாயம். எத்தனையோ அப்பாவி மக்களும் மடிந்தார்களே அப்படி மடிந்த ஒருவனின் மனைவி கண்ணகியிடம் நியாயம் கேட்பதாக ஒரு சிந்தனையை தூண்டிவிடுகிறாரே அது தான் கே.பி.
உலகில் மிகச்சிறந்த இயக்குனர் என்றால் அது கே.பி ஒருவர் தான்.. அவரது மூளை எந்த ஹாலிவுட் இயக்குனருக்கும் கூட இல்லாத ஒன்று ..
இந்த சிந்தனைக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம்
புதிய சிந்தனை கடினமான சூழலை சொல்லியாகிற்று .இப்பொழுது இன்னொரு மகான் நம் மெல்லிசை மாமன்னர் அவர் பங்குக்கு அமானுஷ்யத்தை காட்ட வேண்டாமா
இதோ அவர் குரலிலேயே துவங்குகிறார் இந்த மேடைப்படலை
இதில் இன்னொரு அமானுஷ்யம் வாலி அவர்கள். வார்த்தை அருவி ..
ஆரம்பம் அதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்
சிலப்பதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்
குரலிலேயே அந்த அதிகாரம் முடிந்தது ஆனால் இதோ இன்னொரு ஆரம்பம் என்ற அந்த தொனியில் அவரது குரல் ..
அநீதி கொன்றது மங்கையின் பதியை
அக்னி தின்றது மதுரையம்பதியை
ஆம் கண்ணகியாள் கற்பிற்கு இதோ இந்த அக்னி சாட்சி
அப்ப்டி அவர் பாடி முடித்ததும் கண்ணகியின் அந்த கோபக்கனலை உணர்த்தும் விதமாக எரியும் தீயின் இசை .. கண்ணகியின் தாண்டவம்
மதுரை எரிப்பு எல்லாமே ஒரு 10-15 நொடியில் சீமாவின் நடனமும் மன்னரின் இசையும் மிரட்ட
இன்னொரு பெண் வந்து நிறுத்து என்று குரல் கொடுக்க (வாணிஜெயராம்) அப்படியே நிசப்தமாக அந்த காட்சி .. அந்த நிறுத்துவிற்கு அத்தனை வலிமை
இப்பொழுது மெல்லிசை மேற்கத்திய இசையுடன் ஆரம்பம் அந்த இன்னொரு பெண்ணின் குமுறல்
ஆலவாய் நகரை அனல்வாய் சேர்த்து கோலவாய் சிவக்க கொக்கரிக்காதே ..
யார் நீ என கண்ணகி கேட்க
இன்னொரு கண்ணகி
என்ன
எண்ணிக்கொள் அப்படி .................
இடையிசையிலே உணர்வை சொல்வார் மன்னர் ..
உன்னுயிர்த் தலைவன் பொன்னுயிர்தனை காவலன் நீதி கவர்ந்தது போலே (மீண்டும் கண்ணகியின் தாண்டவ நடனம்)
என்னுயிர்த் தலைவன் இன்னுயிர்தனை இழந்து நிற்கும் ஏந்திழையாள் நானே (இசை மாற்றம் .. மெல்லிய இசை தபேலா மட்டும்)
யாரோ ஒருத்தி வந்து பேசினால் கண்ணகி மடங்கிவிடுவாளா .. தாண்டவம் தொடர்கிறது
ஈஸ்வரியக்கா பாடுகிறார்
பாண்டியன் எனது பொட்டழித்தான்
ஆயிழையே உன் நாயகன் தனது ஆவி பறித்தது யாரோ .....................
இப்பொழுது மீண்டும் அந்த தீ இசை இப்பொழுது இன்னொரு கண்ணகிக்கு
நீயே நீ வளர்த்த தீயே .................
கண்ணகி பொறுப்பாளா தன்னைக்குற்றம் சாட்டிவிட்டாள் அல்லவா . இதோ
குற்றத்தீர்பெழுதிய கூடல் மாநகரிது முற்றும் தீர்ந்திடவே தீ வைத்தேன் தொடரும் இசை அமர்க்களம்
துஷ்டக்காவலவன் அவன் இஷ்டக்கோவலனுடல் வெட்டிச்சாய்த்திட பழி நான் தீர்த்தேன்
தாண்டவம் தொடர்கிறது. அவளது செயல் நியாயம் என்பது போல் அவள் பாடுகிறாள்
இசை சோகத்து மாறுகிறது
இன்னொரு பெண் பாடுகிறாள்
நீதான் மூட்டிய தீயினில் வெந்தான் நங்கையின் ஆருயிர் காதலனே
நான் தான் மாலைகள் நாளைய காலை சூட்டிட வாய்த்த என் நாயகனே
காதலை நான் இழந்தேன் அதன் காரணம் நீ அல்லவோ
பிறன் காதலி உன்னாலே இங்கு கைம்பெண் ஆவதுவோ
என அழுதபடி குற்றம் சாட்டுகிறாள்
கண்ணகி அதற்கு பதிலளிக்கிறாள் இப்படி
வானும் நிலமும் புனலும் சுட வேந்தன் அரசும் மனையும் கெட ஆணையிடவும் அனலும் வர தீ தீ தீ (இருவரும் சேர்ந்து ஆடும் இசை ..... )
நகரம் முழுதும் தழலும் எழ உந்தன் தலைவன் உடலும் விழ அடியள் பிழையோ தவறோ இது சொல் சொல்
தொடரும் இசை ...... அபாரம்
இன்னொரு பெண் தொடர்கிறாள் இப்படி
குற்றமிழைத்தவன் செத்து மடிந்தபின் மற்ற உயிர்க்கேன் தண்டனையோ
உந்தன் இழப்பில் ஊரை எரிப்பது எந்த விதத்தினில் நெறி முறையோ
மற்ற உயிர்க்கு தீங்கு வராமலே உன்னை எரித்திங்கு காட்டிடுவேன்
இன்னொரு கண்ணகி என்று விளங்கிட கற்பு நெருப்பினை மூட்டிடுவேன் .........
கற்பின் கனலே வருக என் கட்டளை முடித்து தருக
கல் மனம் கொண்டாள் இவளை ஒரு கல்லாய் ஆக்கிவிடுக
மன்னர் இசையால் மிரட்டிய ஒரு காட்சியமைப்பு ..
மீண்டும் எழுகிறது மன்னர் குரல் ..
இப்படி ஒரு புதிய சிந்தனையாக இருந்தாலும் அது கற்பனையே என்று முடிக்கிறார்
இளங்கோ அடிகள் நூலால் விளைந்தது இந்த சிந்தனையே புதுச்சிந்தனையே வெறும் கற்பனையே
பூந்தமிழ் கற்ற புலவர்கள் எல்லாம் பொறுத்தருள்க என மன்னர் முடிப்பார்
இப்படி ஒரு மகத்தான சிந்தனையை கொண்டுவந்த கே.பி அவர்களையும் அப்படி ஒரு காட்சிக்கு இப்படி ஒரு மிரட்டலான இசைகோர்ப்பை செய்து அதை இசை விருந்தாக்கிய மாமன்னரையும்
இது ஒரு சவாலான பாடல் அதற்கு தன் வார்த்தைகளால் சந்தத்தில் விளையாடிய வாலி ஐயாவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
கனா காணும் கண்கள் பிரபலமடைந்ததால் இந்த பாடலின் சிறப்பு பலருக்கு தெரியாமலே போயிற்று இருந்தாலும் தெரிய வைக்கத்தானே நாமிருக்கிறோம்........
வாழ்க மன்னர் புகழ்
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Posts (Atom)